2016-11-08 14:43:00

கடவுளுக்கும், உலகுக்கும் ஒரே நேரத்தில் பணியாற்ற முடியாது


நவ.09,2016. நாம் ஆண்டவருக்கு நல்ல முறையில் பணியாற்றுவதற்கு, பதவியைத் தேடுவதிலிருந்தும், அநீதியான முறைகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இச்செவ்வாய், காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும், உலகுக்கும் ஒரே நேரத்தில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தார்.

ஒவ்வோர் உண்மையான சீடரும், தான் பயனற்ற பணியாள் என்றே சொல்ல வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, பதவியையும், அதிகாரத்தையும் தேடும் ஆவல், ஆண்டவருக்குப் பணியாற்றுவதிலிருந்து நம்மை விலக்கி வைக்கின்றது என்றும், மறையுரையில் கூறினார்.

பல காரியங்கள், நாம் ஆண்டவருக்குப் பணியாற்றுவதற்குத் தடைகளாக உள்ளன, அவற்றில் ஒன்று பதவி என்றும், எந்த ஒரு பணியாளும், இரண்டு தலைவர்களைக் கொண்டிருக்க முடியாது என்று, ஆண்டவர் சொல்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுதந்திரமாகவும், அடிமைகளாக அல்ல, ஆனால், கடவுளின் பிள்ளைகளாகவும், நாம் கடவுளுக்குப் பணியாற்ற வேண்டும் என்றும், நாம் இலவசமாகப் பணியாற்றினாலும், கடைசியில், பயனற்ற பணியாள் என்றே சொல்ல வேண்டுமென்றும், மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.