2016-11-07 15:22:00

வாரம் ஓர் அலசல் – நன்மை செய்ய வழிகளா இல்லை!


நவ.07,2016. ஒரு விளையாட்டு மைதானத்தில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் ஆறு பேருக்கு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. விசில் ஊதியவுடன்,  வேகமாக முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென கீழே விழுந்து விட்டார். கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. அப்போது, பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த மற்ற ஐந்துபேரும் ஓட்டத்தை நிறுத்தி, அவரைத் தூக்கிவிட்டு, பின்னர் ஆறுபேரும் கைகளைக் கோர்த்தபடி ஓடிவந்து, ஒன்றாக, வெற்றிக் கோட்டை மிதித்தனர். அன்பர்களே, இவர்களால், நம்மைப்போல் சிந்திக்க முடியாது. ஆனால், ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் எனும் மனப்பான்மை உள்ளதே என்ற சிந்தனையில், இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாட்சப்பில் வந்த ஒரு செய்தி, நெஞ்சை நெகிழ வைத்தது. கேரளாவில் நடந்த நிகழ்வு இது. ஒருவர், போய்க் கொண்டிருந்த வழியில், ஒரு மின்கம்பத்தில், "என்னுடைய ஐம்பது ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவுசெய்து இந்த முகவரியில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்குக் கண்பார்வை அவ்வளவு சரியில்லை" என்று, முகவரியுடன் எழுதப்பட்டிருந்த, ஒரு சிறு துண்டுக் காகிதம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். அதற்குப்பின் நடந்ததை, அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்...

 அந்த வழியில் பார்த்த ஒரு நபரிடம், அந்த முகவரியைக் கூறி, வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" என்றார் அந்த நபர். நானும் சென்றேன். அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒருநாள் மழைக்குக்கூட தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, வயதான ஓர் அம்மா. என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? என்றார்கள். அம்மா நான் இந்த வழியாக வந்தேன், ஐம்பது ரூபாயை வழியில் கண்டெடுத்தேன். அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன் என்றேன். இதைக் கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். “தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது, முப்பத்தஞ்சு பேர் வந்து ஐம்பது ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க. அந்தக் கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது” என்றார்கள். பரவாயில்ல அம்மா, நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.  “தம்பி நீ போகும்போது, அந்த மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டுவிடு” என்று அறிவுரைத்தார் அந்தத் தாய். என் மனதில் விதவிதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்தக் கடிதத்தை கிழித்துவிடு என்று, அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டுதானே இருந்திருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லையே. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு, கடித வடிவில், உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டே நான் திரும்பினேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரத்தோரு வழி என்று, மனதில் சிந்தித்து கொண்டே வரும்போது, வழியில் ஒருவர், என்னிடம். "அண்ணே இந்த முகவரி எங்கேன்னு சொல்ல முடியுமா?  ஐம்பது ரூபாய் கீழே கிடந்தது. அந்த அம்மாகிட்டே குடுக்கணும், வழி சொல்றீங்களா? என்று கேட்டார்.

அன்பு இதயங்களே, இந்த உண்மை நிகழ்வை, நீங்களும்கூட வாசித்திருக்கலாம். இந்த நல்ல மனிதர் சொல்லியிருப்பதுபோன்று, நன்மை செய்யவேண்டும் என்ற, மனம் இருந்தால், அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நன்மை செய்வதற்கு மனதுதான் முக்கியம். “மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்” என்ற தலைப்பில், தினமலரில், ஒரு தகவல் வெளியாகியிருந்தது. வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, வெங்கடாசலம் தெருவின் மையத்தில் உள்ள இவரின் வீட்டுக்கு  வரும் நோயாளர்களில், தெருவில், காய்கறி பழம் விற்கும் மூதாட்டிகள், குப்பை அள்ளுவோர், செருப்பு தைப்பவர் என, ஏழை எளிய மக்களே அதிகம். இக்கூட்டத்தின் நடுவே, ஒரு ஜன்னலோரத்தில், ஒரு சின்ன ஸ்டூலில், டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்கள் உட்கார்ந்துகொண்டு சிகிச்சை அளிக்கிறாராம். 'என்ன குட்டி எவ்வளவு நாளா காய்ச்சல்? கவலைப்படாதே நான் இருக்ககேன்ல, மருந்து மாத்திரை தர்ரேன் உடனே சரியாயிடும்' என்ற, அன்பும் அக்கறையும் கலந்த வார்த்தைகளே, அவரிடம் இருந்து அருவிபோல விழுகின்றன. மருத்துவக் கட்டணமாக, சுருக்குப் பையில் இருந்து, துளாவி எடுத்து ஒரு ஐந்து ரூபாயை நீட்டும் ஒரு தாயிடம், 'வீட்டுக்கு எப்படிம்மா போவே, முடியாத குழந்தையை வச்சுக்கிட்டு நடக்காத தாயி, இந்த ரூபாய்ல ஆட்டோவுல போயிரு என்று அந்த அம்மா கொடுத்த ஐந்து ரூபாயுடன் தன் பையில் இருந்து எடுத்த முப்பது ரூபாயையும் சேர்த்து, முப்பத்தைந்து ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கிறார், பிறகு 'கொஞ்சம் இரும்மா' என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள்போய் இரண்டு டானிக் பாட்டிலை எடுத்துவந்து கொடுத்து, 'இது சத்து டானிக், குழந்தைக்கு கொடு, தெம்பா இருப்பான்' என்று சொல்லி இலவசமாக டானிக் பாட்டிலையும் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். இதுதான் டாக்டர் ஜெயச்சந்திரன். இப்போது 68 வயதைத் தொட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன், இன்னும் பலரால் இரண்டு ரூபாய் டாக்டர் என்ற அடையாளப்படுத்தப்படுகிறார். காரணம், அதுதான், அவர் நீண்டகாலமாக மக்களிடம் வாங்கிய மருத்துவ கட்டணம். இவர், ஏழைகளிடம் இவ்வளவு இரக்கம் காட்டக் காரணம் அவரின் குடும்பச் சூழல்.

டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்கள், சென்னை-புதுச்சேரி சாலையில் உள்ள, கொடைப்பட்டினம் கிராமத்தில், படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர். சின்ன மருத்துவம் பார்த்தால்கூட பிழைத்துக்கொள்ளும் வாய்ப்புக்கூட இல்லாமல், பலர் இறந்ததைப் பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டராக வேண்டுமென்ற கனவு. கிராமத்தில் படிக்க வசதி இல்லாததால், சென்னை வந்து உறவினர் வீட்டில் படித்தார். உணவு என்பதே பழைய கஞ்சிதான். கல்லுாரியில் படிக்கப் போகும்போதுதான் இவருக்கு செருப்பே அறிமுகமானது. நல்ல உணவு, நல்ல உடை என்பதெல்லாம் பிறகுதான். மருத்துவக் கல்லுாரியில் படிக்கும்போதுகூட முதல் இரண்டு வருடம் நடந்துதான் போயிருக்கிறார். பிறகுதான் நண்பர் ஒருவர் தயவில், சைக்கிள் பயணம் சாத்தியப்பட்டது. இப்படியாக மருத்துவரான இவர், படிப்பை முடித்ததும் எடுத்துக்கொண்ட முதல் உறுதி, யாரிடமும் வேலை பார்க்கக் கூடாது. எளிய மக்களின் இருப்பிடத்திற்கே சென்று, இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதுதான். இதற்காகவே வடசென்னைக்கு இவர் சென்றார். அங்கு கிளினிக் வைக்க கையில் காசில்லை, தன்னுடன் படித்த நண்பரின் தந்தை, மருத்துவமனை வைத்துக் கொடுத்து, கூடவே ஒரு நிபந்தனையும் போட்டுள்ளார். இலவசமாக மருத்துவம் பார்த்தால், மரியாதை இருக்காது. இரண்டு ரூபாயாவது வாங்குங்க என்றார். அதன்படி இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு, இவரும், இவரது நண்பரும் மருத்துவம் பார்க்கத் துவங்கினர். சிறிது நாளில், இவரிடமே மருத்துவமனையை ஒப்படைத்துவிட்டு, நண்பர் வெளிநாடு போய் செட்டிலாகிவிட்டார்.

நான் உலகத்திலேயே அதிகம் அன்புகூர்வது, என் மருத்துவத் தொழிலைத்தான். இதன் வழியாக, ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும் எனும்போது, அதில் கிடைக்கும் ஆனந்தமும், மனதிருப்தியும் கோடி கோடியாய்க் கொடுத்தாலும் கிடைக்காது என்று சொல்கிறார் அவர். சிறுவயதில் அன்னை வேளாங்கண்ணி கோயிலில் இருந்து கொடுக்கப்பட்ட மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்ததால், அந்த நன்றிக்காக, நாற்பது வருடங்களுக்கு மேலாக, நாகை வேளாங்கண்ணி கோயில் விழாவின்போது பெரிய அளவில், இலவச மருத்துவ முகாம் நடத்தியவர் டாக்டர் ஜெயச்சந்திரன். அன்பர்களே, நமக்கு நன்மை செய்ய வழிகளா இல்லை. உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தொடங்கியுள்ள புதிய முயற்சி ஒன்றைக் கேளுங்களேன்.

இந்தியாவிலேயே, மிக மிகக் குறைவான விலையில், மருந்துகள் கிடைக்கக்கூடிய ஜெனரிக் மருந்துக் கடையை, உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தில், முதன்முதலாகத் தொடங்கியிருக்கிறார். இன்று உலகில், பல ஏழை மக்கள் நோயினால் இறப்பதற்கு, அவர்களிடம், அந்நோய்க்குரிய மருந்துகள் வாங்குவதற்குப் போதிய பொருளாதார வசதிகள் இல்லாததே காரணம். இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்கிறதா என்று, உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிந்தித்தன் பலனே, இந்த ஜெனரிக் மருந்தகம். இந்த மருந்தகத்தை, விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டுவர, இளைஞர்கள் வழியாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். சாதாரண மருந்துக் கடையில், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் மருந்தை, இந்த ஜெனரிக் மருந்தகத்தில், நூறு ரூபாய்க்கு வாங்கலாம். அதாவது, இந்தக் கடையில், மருந்துகள் சாதாரண விலையைவிட 90 விழுக்காடு குறைவாகக் கிடைக்கும். இதுவரை தமிழகத்தில் யாரும் தொடங்காத புதிய திட்டம் இது. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்ட இளைஞர்களின் குரலுக்கு, அரசியலுக்கு வராமலேயே நம்மால் நன்மைகளைச் செய்ய முடியும் என்று கூறியுள்ள உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள், இன்று அதை நிரூபித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அன்பு இதயங்களே, நன்மை செய்ய வேண்டும் என்ற, மனம் இருந்தால், அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது நன்மை செய்து, பிறரை மகிழ்விப்போம். நாட்டுக்கு நல்லது செய்பவர்க்கு, நாம் துணிந்து தோள் கொடுப்போம். உங்களால் முடிந்த, அனைத்து நன்மைகளையும், அனைத்து வழிகளிலும், அனைத்து இடங்களிலும், அனைத்துக் காலங்களிலும், அனைத்து மக்களுக்கும் செய்யுங்கள் என்றார் ஜான் வெஸ்லி. நன்மை செய்யுங்கள். அது நீங்கள் எதிர்பாராத நேரத்தில், உங்களை வந்தடையும். நன்மை செய்ய வழிகளா இல்லை! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.