2016-11-07 15:45:00

சிறைப்பட்டோரின் யூபிலி விழாவில் திருத்தந்தையின் மறையுரை


நவ.07,2016. நம்மை ஏமாற்றம் அடையச் செய்யாத நம்பிக்கை என்பதே, இன்றைய இறைவாக்கு நமக்குக் கொணரும் செய்தி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் மறையுரையாற்றினார்.

நவம்பர் 5,6 ஆகிய இரு நாட்கள், வத்திக்கானில் கொண்டாடப்பட்ட சிறைப்பட்டோரின் யூபிலி விழாவின் சிகரமாக, ஞாயிறு காலை 10 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நம்பிக்கை, இறைவன் வழங்கும் கோடை என்பதை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

12 நாடுகளிலிருந்து வந்திருந்த 1000த்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள், அவர்களது குடும்பத்தினர், சிறைக்காவலர்கள், சிறைப்பட்டோருக்கு ஆன்மீக வழிகளில் உதவி செய்யும் அருள்பணியாளர்கள், இன்னும் சிறைப்பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்பினர் என 4000த்திற்கும் அதிகமானோர், திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

நாம் செய்த தவறுகளுக்குரிய பரிகாரத்தைச் செலுத்துவது ஒருபுறம் இருந்தாலும், இறைவனின் இரக்கம் என்ற கொடையைப் பெறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

நம்பிக்கை நம்மை முன்னோக்கித் தள்ளும் சக்தி என்றும், அதுவே, நாளைய உலகை நிமிர்ந்து பார்க்க நம்மைத் தூண்டும் சக்தி, என்றும் தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நாம் அனுபவித்துள்ள அன்பு உணர்வு, புதிய வழிகளை நமக்குக் காட்டுகிறது என்று எடுத்துரைத்தார்.

இது உங்கள் யூபிலி என்று, சிறைப்பட்டோரிடம் கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு யூபிலியும் விடுதலையை அறிவிக்கும் ஒரு தருணம் (லேவியர் 25:39-46) என்பதைக் குறிப்பிட்டு, அந்த விடுதலையை நீங்கள் நடைமுறையில் உடனே பெற இயலவில்லை எனினும், விடுதலையை உங்கள் உள்ளங்களில் உணர்வதற்கு தாய் திருஅவை வழிகாட்டுகிறார் என்று சுட்டிக்காட்டினார்.

கைதிகளைச் சந்திக்க தான் சிறைச்சாலைகளுக்குச் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், "ஏன் அவர்கள், ஏன் அது நானாக இருந்திருக்கக்கூடாது?" என்ற கேள்வி தனக்குள் எழுகிறது என்பதைக் கூறியத் திருத்தந்தை, சிறைப்பட்டோர், தண்டனை பெற்றிருப்பது சரிதான் என்று, மற்றவர்கள் தீர்ப்பிடுவதில், ஒருவகை வெளிவேடத் தன்மை விளங்குகிறது என்று கூறினார்.

தாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது என்ற உணர்வைத் தரும் சோதனைக்கு மட்டும் இடம்தரக் கூடாது என்று சிறைக்கைதிகளிடம் விண்ணப்பித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது பாவங்கள் மிகப் பெரியதென்று நாம் உணர்ந்தாலும், "கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்" (1 யோவான் 3:20) என்பதில் நம்பிக்கைகொண்டு, அவரது இரக்கத்திற்கு நம்மைக் கையளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தன் மறையுரையின் இறுதியில், மன்னிப்பைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையில் மூழ்கியிருக்கும் இதயங்களை மன்னிப்பு வெல்லமுடியும் என்றும், வன்முறையால் காயப்பட்டிருக்கும் உள்ளங்களிலிருந்து பிறக்கும் மன்னிப்பு, அந்த உள்ளங்களை குணப்படுத்தும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

சிறைப்பட்டோரின் யூபிலிக்கென பீடத்திற்கருகே வைக்கப்பட்டிருந்த இரக்கத்தின் அன்னை மரியா திரு உருவத்தை நோக்கி தன் எண்ணங்களைத் திருப்பியத் திருத்தந்தை, புதியதொரு வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் சக்தியை, அன்னை மரியா தரவேண்டும் என்ற வேண்டுதலுடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.