2016-11-07 15:56:00

இவ்வுலக வாழ்வு என்பது ஒருவித தற்காலிக உண்மை நிலை


நவ.07,2016. இவ்வுலக வாழ்வு என்பது ஒருவித தற்காலிக உண்மை நிலை, மாறாக, மறு உலக வாழ்வு என்பதோ, முடிவற்ற வாழ்வு நிலை என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் காட்டுவதாக தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எழுவரை மணந்து இறந்த ஒரு பெண்ணின் மறுவாழ்வில் யார் அவர் கணவராக இருப்பார் என்று சதுசேயர் கேட்ட தந்திரக் கேள்விக்கு இயேசு பதிலளித்ததுபற்றி கூறும் இஞ்ஞாயிறு வாசகம், அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவுக்கு சில நாட்களுக்குப்பின் இடம்பெற்றுள்ளது மிகப் பொருத்தமாக உள்ளது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறப்பு மற்றும் உயிர்ப்பு குறித்த மறையுண்மையை தியானிக்க மீண்டும் ஒருமுறை நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார்.

சதுசேயரின் தந்திர வலைக்குள் சிக்காமல், மறு உலக வாழ்வு குறித்த தெளிவான பதிலை வழங்கும் இயேசு, இவ்வுலகின் வாழ்வு குறித்த நியதிகளுக்குள் மறு உலக வாழ்வின் நியதிகள் அடங்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்பு என்பது கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் அடித்தளம் என்பதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முடிவற்ற வாழ்வு குறித்து கிறிஸ்தவம் பேசவில்லையெனில், அது, வெறும் வாழ்வுத் தத்துவமாகவும், நன்னெறிப் பாடமாகவும் மட்டும் மாறிவிடும் என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.