2016-11-05 15:36:00

திருத்தந்தை : எவரும் புலம்பெயர்வதற்கு கட்டாயப்படுத்தப்படலாம்


நவ.05,2016. இந்த உலகில் எவரும் புலம்பெயர்வதற்கு கட்டாயப்படுத்தப்படலாம் என்று, நவம்பர் மாதச் செபக் கருத்துக்கள் பற்றிப் பேசிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயரும் மற்றும் குடிபெயரும் மக்களைப் பெருமளவாக ஏற்கும் நாடுகளுக்காகச் செபிக்கக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இதன் வழியாக, அந்நாடுகள், அம்மக்களுக்கு உதவுவதற்கு ஆதரவும், தேவையான உதவிகளும் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயரும் மக்கள், சட்ட அமைப்பாளர்கள், ஊடகத்துறை, மருத்துவர் ஆகியோர் ஒரு கதவு வழியாகச் சுற்றிவருவதாகத் தெரியும் இந்தக் காணொளியில், கட்டாயமாகப் புலம்பெயரும் பிரச்சனையை ஒரு நாட்டினால் மட்டும் சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரை ஏற்பதற்கு நம்மிலுள்ள, அச்சம் மற்றும் புறக்கணிப்பு நிலையை நீங்கள் கைவிட வேண்டும், ஏனென்றால் இந்தப் பிறர், ஒருநாள் நீங்களாகவும்கூட இருக்கலாம் என்றும், காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, லிபியக் கடல் பகுதியில், புலம்பெயரும் மக்களை ஏற்றிக்கொண்டுவந்த இரண்டு படகுகள் மூழ்கியதில், குறைந்தது 239 பேர் இறந்துள்ளதாக, இவ்வெள்ளியன்று, ஐ.நா அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியின் லாம்பதூசா தீவை நெருங்கும்போது, படகுகள் கடலில் மூழ்கின. இந்த விபத்தில், உயிர் தப்பிய இரண்டு பேர், லாம்பதூசா தீவின் கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய தரைக் கடலைக் கடந்து, ஐரோப்பாவை அடைய முயற்சித்த நேரங்களில், 2016ம் ஆண்டில் மட்டும், 4,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்கள் இறந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.