2016-11-05 15:18:00

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் நவம்பர் 05


நவ.05,2016. சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு எல்லைகள் கிடையாது என்றும், பொதுமக்கள் மத்தியில் இவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்று, ஐ.நா. கூறியுள்ளது.

நவம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, உலக சுனாமி விழிப்புணர்வு நாள், முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தெரிவித்துள்ள ஐ.நா. நிறுவனம், இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வும், கல்வியறிவும், மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமெனவும் கூறியது.

மேலும், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்கு, கல்வி மிகச் சிறந்த கருவி என்று, சுனாமி ஆழிப்பேரலையிலிருந்து தப்பித்தவர்கள் கூறுகின்றனர்.

ஐ.நா. கடைப்பிடித்த இந்நிகழ்வில் பேசிய, சுனாமியிலிருந்து உயிர் பிழைத்த செக் குடியரசின் அழகி ஒருவரும், ஓர் இஸ்பானிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரும் தங்களின் எண்ணங்களைப் ஐ.நா.வில் பகிர்ந்துகொண்டனர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில், தாய்லாந்து கடற்கரையிலிருந்து தப்பித்த, செக் குடியரசின் Petra Nemcova அவர்கள், தண்ணீர் அல்ல, ஒரு பெரிய கான்கிரீட் கட்டடம் தன்மீது விழுந்தது போன்று உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

தான் தங்கியிருந்த பயணியர் விடுதி, ஒருசில வினாடிகளில், முழுவதும் அழிந்தது என்றும், எல்லா இடங்களிலும், கண்ணாடியே இருந்தன என்றும் பகிர்ந்துகொண்ட Nemcova அவர்கள், இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் கையாள்வது இன்றியமையாதது என்றும் கூறினார்.

கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற 58 சுனாமிகளில், 2,60,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும், 2004ல் இடம்பெற்ற சுனாமிப் பேரிடரில், ஏறக்குறைய ஒன்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் உட்பட, 2 இலட்சத்து, இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.