2016-11-05 14:06:00

இது இரக்கத்தின் காலம் – சிறைப்பட்டோருக்கு மறுவாழ்வு


சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்து வந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "ஃபாதர், சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு எனக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

சிறைக்கைதிகள், மறுவாழ்வு பெறுவது, அவர்களை மட்டும் சார்ந்ததல்ல, அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும் அவர்களை வாழவைக்க வேண்டும். மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப் படாததால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம், அவர்களைப்பற்றி, உள்ளத்தில் செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

முற்சார்பு எண்ணம் என்ற சிறையிலிருந்து இறைவன் நம்மை விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுதல், இரக்கத்தின் காலத்தில் எழட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.