2016-11-05 15:18:00

அரசர் அருளாளர் சார்லஸ் இக்காலத்திற்கு எடுத்துக்காட்டு


நவ.05,2016. உண்மையான இறையழைத்தலாகிய திருமணம் தொடங்கி, எல்லா இறையழைத்தல்களையும் விதைக்கும் முதல் நிலம், கிறிஸ்தவக் குடும்பம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆஸ்ட்ரிய நாட்டு அரச குடும்பத்தினரிடம்,  கூறினார்.

ஆஸ்ட்ரியாவின் Habsburg அரச குடும்ப வாரிசுகளின் முன்னூறு பேரை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூறு ஆண்டுகளுக்குமுன், அரச அரியணையில் அமர்ந்த, ஆஸ்ட்ரிய அரசர் அருளாளர் சார்லஸ் அவர்களை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

அரசர் அருளாளர் சார்லஸ் அவர்கள், முதலில், ஒரு நல்ல குடும்ப மனிதராகவும், அடுத்து, மனித வாழ்வு மற்றும் அமைதிக்குத் தொண்டுபுரிபவராகவும் இருந்தார் என்றும், முதல் உலகப் போரில் ஒரு சாதாரண படைவீரராக இருந்த இவர், 1916ம் ஆண்டில், அரசராகப் பொறுப்பேற்றார் என்றும், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின் வேண்டுகோளின்பேரில், தனது அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி, அமைதிக்காக உழைத்தார் என்றும், இவர் நம் காலத்திற்கு எடுத்துக்காட்டு என்றும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Habsburg அரச குடும்ப வாரிசுகளில் சிலர், மனித மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்ற நிறுவனங்களில் வகித்துவரும் முக்கிய பங்கையும், மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில், நம் பொதுவான இல்லம் அமைக்கப்படுவதற்கு, ஐரோப்பாவுக்கு, இவர்கள் உதவி வருவதையும் பாராட்டி, ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.

இந்த அரசப் பரம்பரையின் அடுத்த தலைமுறைகளிலிருந்து, அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளாக, இறையழைத்தல்கள் மலர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இந்த அரசு வாரிசுகள், உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளதையும் வரவேற்றுப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.