2016-11-04 14:57:00

திருத்தந்தையின் சுவீடன் பயணத்திற்கு, கிறிஸ்தவத் தலைவர்கள்


நவ.04,2016. லூத்தரன் சீர்திருத்தம் தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட சுவீடன் திருத்தூதப் பயணத்தை, ஆசிய, பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

பாகிஸ்தானின், பேஷ்வார் ஆங்லிக்கன் ஆர்த்தடாக்ஸ் ஆயர் எர்னஸ்ட் ஜேக்கப் அவர்கள் கூறுகையில், நூற்றாண்டுகளாக இருந்த பிளவுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலம் அமைத்துள்ளார் என்றும், இப்பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில், மிகப் பெரிய முயற்சி என்றும் தெரிவித்தார்.

இந்த நூற்றாண்டு முடிவதற்குள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என, Pew ஆய்வு மையம் கணித்துள்ளது என்றும், இந்நிலையில், கிறிஸ்தவர்கள், பிரிந்து வாழ இயலாது என்றும் கூறினார் ஆயர் ஜேக்கப்.

உலக லூத்தரன் கூட்டமைப்பின் தலைவரும், திருத்தந்தையும் இணைந்து வெளியிட்ட அறிக்கை பற்றிய பாராட்டையும் தெரிவித்த ஆயர் ஜேக்கப் அவர்கள், உரையாடல் மற்றும் ஒன்றுசேர்ந்து தெரிவிக்கும் சான்றுகள் வழியாக, நாம் அந்நியர் அல்ல என்பதைத் தெரிவிக்கிறோம் என்று, அவ்வறிக்கை கூறுவதாகவும் தெரிவித்தார்.

ஆங்லிக்கன், மெத்தடிஸ்ட், லூத்தரன், ஸ்காட்லாந்து சபை என, பாகிஸ்தானில், பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உள்ளன. ஆயினும், 1972ம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் சிந்து மாநிலத்தில், கிறிஸ்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் அரசுடைமையாக்கப்பட்டபோது, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து போராடினோம் என்றும் ஆயர் ஜேக்கப் கூறினார்.  

1985க்கும், 1995ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், எவ்வித இழப்பீட்டுத் தொகையுமின்றி, பள்ளிகள் மீண்டும் கிறிஸ்தவ சபைகளிடம் கொடுக்கப்பட்டன என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தாய்வான் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபை ஆயர் Banjob Kusawadee அவர்கள் கூறுகையில், திருத்தந்தை, இரக்கம் என்ற பண்பை மீண்டும் நாம் கண்டுணர வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.