2016-11-03 16:10:00

வரலாற்றில் முதல்முறையாக, கைதிகளின் சிறப்பு யூபிலி


நவ.03,2016. இத்தாலியின் பல சிறைகளிலிருந்தும், இன்னும் சில நாடுகளின் சிறைகளிலிருந்தும் வத்திக்கானுக்கு வருகை தரும் கைதிகள், நவம்பர் 5,6 ஆகிய இரு நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, இரக்கத்தின் யூபிலியைக் கொண்டாடுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல்முறை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 5,6 ஆகிய இரு நாட்கள், சிறைக் கைதிகளும், நவம்பர் 12,13 ஆகிய இரு நாட்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து கொண்டாடவிருக்கும் யூபிலியைக் குறித்து, புதிய வழி நற்செய்தியை அறிவிக்கும் பணி அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள், நவம்பர் 3, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களின்போது, சிறைக்கைதிகளைச் சந்திப்பது பல முறை நிகழ்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், அவர் தலைமைப் பொறுப்பேற்ற முதல் ஆண்டு, இறுதி இரவுணவு வழிபாட்டை, Casal del Marmo எனப்படும் இளம் கைதிகள் இல்லத்தில் நடத்தினார் என்பதையும், செய்தியாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

இங்கிலாந்து, இத்தாலி, லாத்வியா, மலேசியா, மெக்சிகோ, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தரும் கைதிகள், சிறைக் காவலர்கள், சிறையில் ஆன்மீகப் பணியாற்றுவோர் என, 4000த்திற்கும் அதிகமானோர், இந்த சிறப்பு யூபிலியில் கலந்துகொள்ள தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.

இந்த யூபிலியில் கலந்துகொள்ளும் அனைவரும், நவம்பர் 5, சனிக்கிழமை, உரோம் நகரின் அனைத்து பேராலயங்களுக்கும் திருப்பயணம் மேற்கொள்வர் என்றும், ஞாயிறு காலை 7.30 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவு வழியே நுழைவர் என்றும் பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஞாயிறு காலை 9 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காவில் கைதிகளில் சிலர் வழங்கும் சாட்சியப் பகிர்வுகளுக்குப் பிறகு, 10 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூபிலி திருப்பலியை நிகழ்த்துவார் என்று, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.

இந்தச் சிறப்புத் திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பம், மிலான் நகரின் Opera சிறையில் உள்ள கைதிகள் தயாரித்துள்ள அப்பம் என்றும், இந்த யூபிலியின் பாதுகாவலராக விளங்கும், இரக்கத்தின் அன்னை மரியா, தன் கரங்களில் தாங்கியிருக்கும் குழந்தை இயேசு, திறக்கப்பட்ட கைவிலங்குடன் காணப்படுவார் என்றும் பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.