2016-11-03 15:47:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு திருத்தந்தை தொடர்பு


நவ.03,2016. நவம்பர் 2, இப்புதன் மாலை 5.40 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Spoleto-Norcia உயர் மறைமாவட்ட பேராயர் Renato Boccardo அவர்களை தொலைபேசியில் அழைத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தான் செபத்தாலும், மனதாலும் ஒன்றித்திருப்பதை அவர்களுக்கு தெரிவிக்குமாறு கூறினார் என்று, அவ்வுயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 26, மற்றும் 30 ஆகிய இரு நாட்கள், Umbria மற்றும் Marches பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் காண, இத்தாலிய அரசுத் தலைவர், Sergio Mattarella அவர்கள் வந்திருந்த வேளையில், திருத்தந்தையின் தொலைபேசி அழைப்பும் வந்து சேர்ந்ததென்று பேராயர் Boccardo அவர்கள் கூறினார்.

இந்த நிலநடுக்கங்களால், பழமை வாய்ந்த பல ஆலயங்களும், துறவு  மடங்களும், இடிந்துள்ளன என்பது தன்னை அதிக வருத்தம் அடையச் செய்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயரிடம் கூறினார்.

ஆகஸ்ட் 24ம் தேதி Amatrice பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கபப்ட்டவர்களைக் காண, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளான அக்டோபர் 4ம் தேதி அப்பகுதிக்குச் சென்றதையும், பேராயர் Boccardo அவர்கள் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.