2016-11-03 15:33:00

நம்பிக்கை வாயில்களாக மதங்கள் திகழட்டும் - திருத்தந்தை


நவ.03,2016. இரக்கம் என்ற கருத்தை இணைந்து சிந்திக்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் பலசமயப் பிரதிநிதிகளைச் சந்திப்பதில் தான் பெரிதும் மகிழ்வடைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, வத்திக்கானின், புனித கிளமென்டீனா அரங்கத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கூறினார்.

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, பிறரன்புப் பணிகளில், குறிப்பாக, இரக்கத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கும் யூத, இஸ்லாமிய, இந்து, புத்த, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமான உலகப் பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு விரைவில் நிறைவடையும் என்பதையும், இறைவனின் பெயரை வெளிப்படுத்துவது, அவரது இரக்கமே என்றும், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

இரக்கத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்து உண்மையான மதங்களும் ஒருங்கிணைந்து, இவ்வுலகிற்கு அதிகம் தேவைப்படும் மன்னிப்பையும், அமைதியையும் பறைசாற்றுவது முக்கியம் என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

"மரணம், இறுகிப்போய் கடினமாக இருக்கும்; வாழ்வு மிருதுவாக, வளைந்துகொடுக்கும்" என்று தாவோ (Tao-Te-Ching) மரபில் வழங்கப்படும் ஒரு பழமொழியை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலுவற்றோர், தேவையில் இருப்போர் நடுவே மிருதுவாகப் பணிபுரிவது, அனைத்து மதங்களும் கூறும் வழிமுறை என்று கூறினார்.

அரேபிய, எபிரேய மொழிகளில், 'இரக்கம்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லாக இருப்பது, தாயின் 'கருவறை' என்ற சொல் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டிருக்கும் உறவே, இரக்கம் என்ற பண்பை வெளிப்படுத்தும் உண்மை நிலை என்று கூறினார்.

மிகத் துரிதமாக, மூச்சடைக்கும் வண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், தேவையான சுவாசக் காற்றாகச் செயலாற்றுவது இரக்கம் என்ற உருவகத்தில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் கொண்டிருக்கும் தாகத்தை, எந்த ஒரு தொழில் நுட்பமும் தணிக்கமுடியாது என்று சுட்டிக்காட்டினார்.

இரக்கம் என்ற உணர்வு, மனிதர்களுக்கு மட்டும் காட்டப்படாமல், சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும் காட்டப்படவேண்டும் என்று தன் உரையில் வலியுறுத்தியத் திருத்தந்தை, வருங்காலத் தலைமுறையினரைக் குறித்து எவ்வித கரிசனையும் இன்றி, நாம் படைப்பைச் சீரழிப்பதை, எந்த மதமும் ஏற்றுக்கொள்ளாது என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு மதமும், வாழ்வைப் பேணி வளர்க்கும் கருவறையாக இருக்கட்டும், காயப்பட்டிருக்கும் மனுக்குலத்திற்கு இறைவனின் இரக்கத்தை ஏந்திச் செல்லட்டும், அகந்தையாலும், அச்சத்தாலும் எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களை துளைத்துச் செல்லும் நம்பிக்கை வாயில்களாக, மதங்கள் திகழட்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.