2016-11-02 15:28:00

கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் வெளியிட்ட அறிக்கை


நவ.02,2016. கத்தோலிக்கத் திருஅவைக்கும், லூத்தரன் உலக கூட்டமைப்பிற்கும் இடையே உள்ள உறவை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், அக்டோபர் 31, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லூத்தரன் உலகக் கூட்டமைப்பின் தலைவர், ஆயர் மவுனிப் யூனான் (Mounib Younan) அவர்களும், லூண்ட் (Lund) லூத்தரன் பேராலயத்தில் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

"நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது." (யோவான் 15:4) என்ற நற்செய்தி வாக்கியங்களுடன் துவங்கும் இவ்வறிக்கையில், நான்கு பகுதிகள் அமைந்துள்ளன.

மோதலிலிருந்து ஒருங்கிணைப்பிற்குச் செல்லுதல், பொதுவான சாட்சியம் பகர நமது அர்ப்பணம், கிறிஸ்துவில் ஒன்றிப்பு, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களுக்கும், லூத்தரன் சபையினருக்கும் அழைப்பு என்ற நான்கு பகுதிகளில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து வரும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உரையாடல் முயற்சிகள், இன்னும் தீவிரமாகத் தொடரப்படவேண்டும் என்றும், முழுமையான ஒன்றிப்பிற்குத் தடையாக உள்ள அனைத்தையும் நீக்குவதற்கு தகுந்த செயல்பாடுகள் நிகழவேண்டும் என்றும் இவ்வறிக்கையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

வறியோர் சார்பிலும், அநீதியாலும், தேவைகளாலும் துன்புறுவோர் சார்பிலும் கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற கருத்தும் இந்த இணைந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.