2016-11-01 14:37:00

மால்மோவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு விழா


நவ.01,2016. அக்டோபர் 31, இத்திங்கள் பிற்பகல் 2.30 மணிக்கு, Lund நகரின் பழமையான லூத்தரன் பேராலயத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர், அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, மால்மோ நகர் அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ஹாக்கி விளையாட்டுக்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்த அரங்கத்தில், இசைக் கச்சேரிகளும், பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. ஏறத்தாழ பத்தாயிரம் பேர் அமரக்கூடிய இந்த அழகிய அரங்கில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், சிறிய மின்சார வாகனத்தில் சுற்றி வந்து மேடைக்குச் சென்றார். அவ்வரங்கத்தின் நடுப்பகுதி, அழகான வண்ண மலர்களால், பெரிய சிலுவை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாகனத்தில், திருத்தந்தையுடன், LWF உலக லூத்தரன் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Mounib Younan, அவ்வமைப்பின் செயலர் லூத்தரன் அருள்பணி Martin Junge, திருப்பீட  கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch ஆகியோரும் சென்றனர். பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் முப்பது பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவாகச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விழா, பாடகர் குழுவின் இனிய பாடலுடன் ஆரம்பமானது.

முதலில், LWF உலக லூத்தரன் கூட்டமைப்பின் செயலர் அருள்பணி Junge அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன் பின்னர், ஆசியா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த நால்வர் சான்று பகர்ந்தனர். முதலில் இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின், ஜெய்ப்பூரைச் சேர்ந்த, 26 வயது நிரம்பிய Sunemia Pranita Biswasi அவர்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினார். பின்னர், கொலம்பிய நாட்டின் காரித்தாஸ் இயக்குனர் பேரருள்திரு ஹெக்டர் ஃபாபியோ அவர்கள், கொலம்பிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் பற்றி எடுத்துச் சொன்னார். அடுத்துப் பகிர்ந்துகொண்ட, ஆப்ரிக்காவின் புருண்டி நாட்டு Marguerite Barankitse அவர்கள், நாம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவர்கள் என்ற தலைப்பில் பேசினார். நான்காவதாக, தென் சூடானைச் சேர்ந்த, 23 வயது நிரம்பிய, Rose Nathike Lokonyen அவர்கள் பகிர்ந்துகொண்டார். இந்த நால்வரின் பகிர்வுகள் முடிந்ததும், உலக லூத்தரன் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Younan  அவர்களும், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றிய போது, அங்கு இருந்த, சிரியாவின் அலெப்போ ஆயர் அந்துவான் அவ்தோ பற்றிக் குறிப்பிட்டு, ஆபத்துக்கள் மத்தியில் அவர் ஆற்றும் பணியை ஊக்குவித்தார். ஆயர் அந்துவான் அவர்களின் பகிர்வும் இடம்பெற்றது. அலெப்போ நகர் போரினால், தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மக்களின் மிக அடிப்படை உரிமைகள் வெறுப்புடன் நோக்கப்பட்டு, அவை காலால் மிதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார் ஆயர் அந்துவான். இதன்பின்னர், உலக கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனமும், உலக லூத்தரன் கூட்டமைப்பின் சமூகநல அமைப்பும் இணைந்து, “நம்பிக்கையில் ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில், அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன. மனித மாண்பு மற்றும், சமூக நீதியை ஊக்குவிப்பதற்கு, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதியளிக்கும் அறிக்கை இது. இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவின் இறுதியில் கர்தினால் கோக் அவர்கள் செபித்தார்.

அனைவரையும் ஆசீர்வதித்த திருத்தந்தை, மீண்டும் மின்சார வாகனத்தில் அந்த அரங்கில் வந்தார். அதன்பின்னர், அங்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார். இந்நிகழ்வில், சுவீடன் பிரதமர் Stefan Lofven அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். பின்னர், திருப்பீடத் தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இத்திங்கள் பிற்பகல் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.