2016-11-01 14:47:00

மால்மோ கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவில் பகிர்வுகள்


நவ.01,2016. சுவீடன் நாட்டின், மால்மோ அரங்கில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவில் ஆசியா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த நால்வர் சான்று பகர்ந்தனர். முதலில் இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின், ஜெய்ப்பூரைச் சேர்ந்த, 26 வயது நிரம்பிய Sunemia Pranita Biswasi அவர்கள், காலநிலை மாற்றம் குறித்துப் பேசினார். ஏறக்குறைய, 130 கோடி மக்கள் வாழ்கின்ற இந்தியாவில், பெருமளவான மக்கள், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர். 2015ம் ஆண்டு டிசம்பரில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். 18  இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தனர். சுற்றுச்சூழல் அறிவியலில், முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நான், உலகம் வெப்பமடைந்து வருவதன் கடும் விளைவுகள் பற்றி அறிந்துகொண்டேன். உலக லூத்தரன் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற வகையில், உலகின் பல்வேறு நகரங்களில், ஐ.நா. நடத்திய பல்வேறு காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன், நவம்பர், 4, வருகிற வெள்ளியன்று, காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் அமலுக்கு வரவுள்ளது. கடவுளுக்கு நன்றி சொல்வோம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தால் துன்புறும் இலட்சக்கணக்கான நலிந்த மக்களின் வாழ்வதற்கான சட்டமுறையான உரிமைகள் காக்கப்படுவதற்கு, உலக அரசியல் தலைவர்களை, திருத்தந்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிஸ்வாசி அவர்கள் பகிர்ந்துகொண்ட பின்னர், கொலம்பிய நாட்டின் காரித்தாஸ் இயக்குனர் பேரருள்திரு ஹெக்டர் ஃபாபியோ அவர்கள், கொலம்பிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் பற்றி எடுத்துச் சொன்னார். அந்நாட்டில், FARC புரட்சியாளர்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் பற்றியும், அந்நாட்டின் நீண்ட கால உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டவர்க்கு உரிமைகள மீட்டுக்கொடுப்பதில் காரித்தாசின் முக்கிய பணிகள் பற்றியும் விளக்கினார். நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டவர்க்கு, கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் கூட்டமைப்பும் இணைந்து ஆற்றும், ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் கூறினார்.

அடுத்துப் பகிர்ந்துகொண்ட, ஆப்ரிக்காவின் புருண்டி நாட்டு Marguerite Barankitse அவர்கள், நாம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவர்கள் என்ற தலைப்பில் பேசினார். 1993ம் ஆண்டில், புருண்டியில், உள்நாட்டுச் சண்டை தொடங்கியபோது, தான் ஏழு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தேன். அன்று தொடங்கிய எனது பணி, இன்று, அமைதி இல்லம் என்ற பெயரில் இயஹ்கி வருகிறது. இவ்வுலகில், மகிழ்வை விநியோகம் செய்வதற்கு கனவு காண்கிறேன் என்றார்.

நான்காவதாக, தென் சூடானைச் சேர்ந்த, 23 வயது நிரம்பிய, Rose Nathike Lokonyen. அவர்கள் பகிர்ந்துகொண்டார். தனக்கு 8 வயது நடந்தபோது, தனது குடும்பம் அகதியாக கென்யாவில், அடைக்கலம் தேடியது என்று, தன் நிலையை விவரித்தார். இவர், ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், புலம்பெயர்ந்த ஒலிம்பிக் குழுவில் பங்கெடுத்தவர். இளைய தலைமுறைகளுக்குப் பள்ளிகள் தேவைப்படுகின்றன. சாலை வசதிகள் இருந்தால், அண்டை நாடுகளைப் பார்வையிடலாம். விளையாட்டு நிகழ்வுகளை நடத்தலாம். தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று, நாட்டை மீண்டும் கட்டியமைக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார் ரோசி

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.