2016-11-01 14:56:00

திருத்தந்தையின் சுவீடன் திருத்தூதுப் பயண நிறைவு


நவ.01,2016. நவம்பர் 1, இச்செவ்வாய், அனைத்துப் புனிதர்கள் விழா. புனிதர்கள், ஆன்மாவின் ஆழத்தில் உள்ள உண்மையான மகிழ்வின் இரகசியத்தையும், உண்மையான மகிழ்வு, இறையன்பில் உள்ளது என்பதையும் கண்டுபிடித்தவர்கள் என்ற, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும் இச்செவ்வாயன்று வெளியாயின. இன்று காலை 9.30 மணிக்கு, மால்மோ நகர், Swedbank கால்பந்து விளையாட்டு அரங்கத்தில், சுவீடன் நாட்டு கத்தோலிக்கச் சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 18 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் கூடியிருந்த, ஏறக்குறைய 15 ஆயிரம் விசுவாசிகளுக்கு, திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார். இத்திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

இத்திருப்பலியின் இறுதியில், உலக லூத்தரன் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Munib A. Younan,  செயலர் அருள்பணி Martin Junge ஆகியோரைத் தழுவி தனது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இத்திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வாயப்பளித்த, சுவீடன் லூத்தரன் சபை பேராயர் Jackeline Antje அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். கத்தோலிக்கர், தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருக்குமாறு ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். துன்புறும் மக்களுக்கு, மனத்தாராளத்துடன் உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியை நிறைவு செய்து, அங்கிருந்து மால்மோ பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு சுவீடன் கலாச்சார அமைச்சர் திருத்தந்தையை வழியனுப்பி வைத்தார். அனைவரிடமும் விடைபெற்று, பகல் 12.55 மணிக்கு உரோமைக்குப் புறப்ப்ட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 17வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது. வழியில் கடந்துவந்த, சுவீடன், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும் இத்தாலி நாடுகளின் தலைவர்களுக்கு, தந்திச் செய்திகளையும் அனுப்பினார். 2 மணி 45 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில், மதிய உணவையும் முடித்துக்கொண்ட திருத்தந்தை, இப்பயணம் பற்றி செய்திகளை அறிவித்த, தன்னோடு பயணம் செய்த செய்தியாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.    

கிறிஸ்தவ ஒன்றிப்புக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.