2016-11-01 12:31:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவில் திருத்தந்தை வழங்கிய உரை


நவ.01,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, லூத்தரன் சீர்திருத்தத்தின் 500ம் ஆண்டு நிறைவை நாம் இணைந்து கொண்டாடுவதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நம்மைப் பிரிக்கும் சக்திகளை விட, இணைக்கும் சக்திகள் அதிகம் என்பதையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஒரு தலையாய அவசியம் என்பதையும் இந்தக் கொண்டாட்டம் நமக்கு நினைவுறுத்துகிறது. இந்த ஒற்றுமையை அடைய நாம் மேற்கொண்ட முயற்சிகள் இறைவன் நமக்கு வழங்கிய ஒரு  பரிசு.

ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு, நம்பிக்கை கொள்ள நாம் மேற்கொண்ட உரையாடல் உதவியது. உலக லூத்தரன் கூட்டமைப்பும், கத்தோலிக்கத் திருஅவையும் பல்வேறு நிறுவனங்கள் வழியே கொண்டிருக்கும் கூட்டுறவு, இந்த உரையாடலின் ஒரு முக்கிய கனியாகும். நமது உரையாடலின் விளைவாக, மனித மாண்பையும், சமூக நீதியையும் வளர்க்கும் வகையில், உலக லூத்தரன் கூட்டமைப்பும், அகில உலக காரித்தாஸ் அமைப்பும் இணைந்து ஓர் அறிக்கையில் கையெழுத்திடவிருக்கின்றன. போர்களாலும், மோதல்களாலும் சிதைந்துவரும் இவ்வுலகில், இவ்விரு அமைப்புக்களும் மேற்கொள்ளும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

சாட்சியங்கள் பகிர்ந்தவர்களின் கூற்றுகளை நான் கவனமாகக் கேட்டேன். பிரானிதா (Pranita) அவர்கள், படைப்பைக் குறித்துப் பேசினார். படைப்பு, இறைவனின் அளவற்ற அன்புக்கு ஓர் அடையாளம். படைக்கப்பட்ட இவ்வுலகிற்கு நாம் இழைக்கும் கொடுமைகள் குறித்து அவர் வெளியிட்ட கவலைகளில் நானும் பங்கேற்கிறேன். சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது, வலுவற்ற மனிதர்களே என்று அவர் சொன்னது, முற்றிலும் உண்மை. மனிதர்கள் அனைவரும், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அனைவரும், படைப்பைக் காக்கும் பொறுப்பை பெற்றுள்ளோம். நாம் ஒவ்வொருவரும் நமக்குள், நம் அயலவருடன், நம்மைச் சுற்றியுள்ள படைப்புடன் நல்லிணக்கத்தை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளோம். பிரானிதா, நமது பொது இல்லமான இவ்வுலகைக் குறித்து நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணத்தை வளர்த்துக்கொள்ள, உங்களை நான் ஊக்குவிக்கிறேன்.

கொலம்பியா நாட்டில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து, அருள்பணி ஹெக்டர் ஃபாபியோ (Héctor Fabio) அவர்கள் பகிர்ந்துகொண்டார். சமுதாயப் பொதுநலனுக்கென கிறிஸ்தவர்கள் இணைந்து வந்திருப்பது, மிகவும் நல்லது. அனைவரின் இணைந்த முயற்சியால் அந்நாட்டில் உண்மையான அமைதி வளரவேண்டும். இதே வேண்டுதல், மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையும் சென்றடையட்டும்.

பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் நடுவில் உழைக்கும் மார்கரீத் (Marguerite) அவர்கள் ஆற்றும் பணி போற்றுதற்குரியது. நாட்டைவிட்டு நீங்கள் புலம் பெயர்ந்திருந்தாலும், உங்கள் பணியை தொடர்ந்து செய்வதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் பணியை மதியீனம் என்று மற்றவர்கள் கூறினாலும், அதை நீங்கள் தொடர்வது, மிகவும் சிறந்தது. இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு செய்யப்படும் இத்தகையப் பணிகள், மதியற்றவையாகத் தெரிந்தாலும், இவ்வுலகிற்கு தேவையானவை.

இன்று சான்று பகர்ந்தவர்களில் மிகவும் இளையவரான ரோஸ் (Rose) கூறியவை, நம் உள்ளத்தைத் தொட்டன. உங்களுடைய பகிர்வை நான் கேட்டபோது, இதனை, உலகில் உள்ள பல இளையோர் கேட்கவேண்டும் என்று உணர்ந்தேன். ரோஸ், தென் சூடானில் வாழும் பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் தூண்டுதலாக பணியாற்றுவதற்காகவும், அமைதிக்கென ஒவ்வொரு நாளும் செபித்து வருவதற்காகவும் நன்றி கூறுகிறேன்.

இவர்கள் வழங்கிய சக்திமிக்க சாட்சியங்கள், நமது வாழ்வைப் பற்றி எண்ணிப்பார்க்கத் தூண்டுகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தேடிச் செல்வது, கிறிஸ்தவர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள தலையாயப் பணி.

அலெப்போ நகரில் வாழும் ஆயர் அந்துவான் (Antoine) அவர்களின் சாட்சியத்தை, இன்னும் சிறிது நேரத்தில், கேட்கவிருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரினால் சிதைந்துவரும் சிரியா நாட்டைக் குறித்து, ஒவ்வொரு நாளும் நாம் துயரம் மிகுந்த செய்திகளைக் கேட்டு வருகிறோம். இந்நாட்டை இவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கும் அனைவரும் மனமாற்றம் அடைவதற்கு நாம் இறைவனிடம் மன்றாடுவோம். எதிர்ப்புக்களைக் கண்டு நாம் மனம் தளரவேண்டாம். இன்று நாம் கேட்ட சாட்சியங்கள், இன்னும் அதிக ஆர்வத்துடன் செயலாற்ற நம்மைத் தூண்டுவனவாக. நாம் இன்று வீடு திரும்பும்போது, நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும் இன்னும் சிறிது அமைதியையும், ஒப்புரவையும் கொணரும் முயற்சிகளை மேற்கொள்வோமாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.