2016-11-01 14:43:00

இது இரக்கத்தின் காலம் : வாழ்க்கைப் பயணம் சுமுகமாக அமைய...


ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம், நான்கு பேர் சென்று, ஐயா, இந்த உலகில் நடக்கும் காரியங்களில், நியாயம் எது? அநியாயம் எது? என்பது தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறோம், தயவுசெய்து எங்கள் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள் என்று பணிவோடு கேட்டனர். சரி, என்னோடு இந்த புஷ்பக விமானத்தில் ஏறுங்கள், உலகில், சாதாரணமாக நடக்கும் காட்சி ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன். அது நியாயமா? அநியாயமா? என்று நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பதில் தவறாக இருந்தால், அந்த இடத்திலேயே இந்த விமானம் உங்களை இறக்கி விட்டுவிடும் என்று சொல்லி, அவர்களுடன் பயணத்தை ஆரம்பித்தார் முனிவர். வழியில் ஒரு காட்டில், குட்டி போட்ட தாய்ப் புலி ஒன்று, தனது குட்டிகளுக்காக, இரைதேடி பசியோடு சென்று கொண்டிருந்தது. அதேநேரம், குட்டி போட்ட தாய் மான் ஒன்று, தனது குட்டிகளுக்காக, இரைதேடி பசியோடு வந்து கொண்டிருந்தது. மானைப் பார்த்த புலி, அதனைக் கடித்துக் குதறி, தனது குட்டிகளுக்கும் உணவூட்டியது. புலிக்குட்டிகளும் மகிழ்வோடு தின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்த முனிவர், அந்த நால்வரிடமும், அந்தப் புலி செய்தது பற்றிக் கேட்டார். முதலில் ஒருவர், புலி செய்தது நியாயம்தான். தனது பசிக்கு, தானே இரை தேடிக்கொண்டது என்றார். இது தவறான பதில் என்று, அந்த விமானம், அவரை உடனே கீழே இறக்கிவிட்டது. பின்னர், இரண்டாவது ஆள், புலி செய்தது அநியாயம். அந்தத் தாய்மான் என்ன பாவம் செய்தது, அதன் குட்டிகளுக்கு யார் ஆதரவு என்று சொன்னார். உடனே அவரையும் விமானம் கீழே இறக்கிவிட்டது. அடுத்து மூன்றாவது ஆள், புலி இரை தேடியதும் இயற்கை. மான் தேடியதும் இயற்கை. இதில் எதுவும் தவறில்லை, இரண்டுமே நியாயம்தான். என்றார். அதுவும் தவறான பதில் என்று, அவரும் இறக்கிவிடப்பட்டார். அடுத்து நான்காவது ஆள், எனக்குப் தெரியாது என்றார். அவரை விமானம் அழைத்துக்கொண்டு சென்றது.

இந்த உலகில் எவ்வளவோ காரியங்கள் நடக்கின்றன. அதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. தெரியாததை, தெரியாது என்று ஒத்துக்கொண்டால், வாழ்க்கைப் பயணம் சுமுகமாக அமையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.