2016-10-31 16:00:00

லூத்தரன் சீர்திருத்த சபையின் ஆரம்பம்


அக்.31,2016. ஜெர்மனியின் Wittenberg பல்கலைக்கழகத்தில், நன்னெறியியல் பேராசிரியராகப் பணியாற்றிய, அகுஸ்தீன் துறவு சபை அருள்பணி மார்ட்டின் லூத்தர்(1483-1546) அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் இறையியல் மற்றும் சில நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்ய விரும்பினார். மதத்தின் அதிகார மையமாக இருப்பது விவிலியம். மனிதர், தங்களின் செயல்களால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே, மீட்படைய முடியும். இவையிரண்டும், மார்ட்டின் லூத்தரின், இரு முக்கிய நம்பிக்கைகளாக இருந்தன. அக்காலத்தில், பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காக, பரிபூரண பலன்களை, விற்பனை செய்த, கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளை எதிர்த்தார் இவர். எனவே, தனது கருத்துக்கோட்பாடுகளை, “95 கருத்துக்கோட்பாடுகளாக(95 Theses)”, 1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஜெர்மனியின் Wittenberg ஆலயக் கதவில் ஒட்டினார் மார்ட்டின் லூத்தர். இதுவே கத்தோலிக்கத் திருஅவைக்கும், லூத்தருக்கும் இடையே பிரிவினைக்குக் காரணமானது. 1521ம் ஆண்டில் இப்பிரிவினை தெளிவாக அறிவிக்கப்பட்டது. லூத்தரின் சீர்திருத்த கருத்துக்களின் அடிப்படையில், லூத்தரன் சபை உருவானது. இவரின் கருத்தியல்களால், மேற்கத்திய நாடுகளில், சீர்திருத்த சபைகள் பரவின. வரலாற்றில், பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உருவாவதற்கு மார்ட்டின் லூத்தரின் இக்கருத்துக்கோட்பாடுகளே காரணமாக அமைந்தன. அக்காலத்தில், இது, கத்தோலிக்கத் திருஅவையில் ஏற்பட்ட பெரும் பிளவாகும். லூத்தரின் எழுத்துக்கள், மேற்குலகில், சமய மற்றும் கலாச்சார மாற்றங்களுக்கும் வித்திட்டன என்று சொல்லப்படுகின்றது. 16ம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவிய நாடுகளில் லூத்தரன் சபை பரவியது. சுவீடன் அரசர், லூத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். தற்போது, சுவீடனில் ஏறக்குறைய 84 விழுக்காட்டினர் லூத்தரன் கிறிஸ்தவ சபையினர். கத்தோலிக்கர் 1.15 விழுக்காட்டினர் மட்டுமே. மேலும், உலகின் எல்லாக் கண்டங்களிலும், 98 நாடுகளில், லூத்தரன் மரபுகளைக் கொண்டிருக்கும், 145 உறுப்பினர் சபைகள் உள்ளன. ஏழு கோடியே இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட அங்கத்தினர்களைக் கொண்டிருக்கும் இச்சபைகள், LWF என்ற உலக லூத்தரன் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுகின்றன. லூத்தர் காலத்திலேயே, அவர் தொடங்கிய சீர்திருத்தம், மாற்றுக் கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்லிக்கன், கால்வினிசம், பிரஸ்பிட்டேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி, எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த சபைகள் எல்லாம், பிரிந்த கிறிஸ்தவ சபைகள்  என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இன்று உலகில், முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை, கிறிஸ்தவ சபைகள் உள்ளன. இவற்றில் நான்கில் மூன்று பகுதி, தனித்தியங்கும் சபைகள் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள, Gordon-Conwell இறையியல் கல்லூரியின் கணிப்புப்படி, உலகளவில், ஒவ்வொரு பத்து மணி ஐந்து நிமிடங்களுக்கும், ஒரு புது சபை உருவாகின்றது எனவும், 2025ம் ஆண்டில், இச்சபைகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை எட்டு என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது. உலகளவில், 1,800ஆம் ஆண்டில் 500 ஆகவும், 2008ஆம் ஆண்டில் 39 ஆயிரமாகவும் இருந்த கிறிஸ்தவ சபைகளின் எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டில், ஏறக்குறைய 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனவும், Gordon-Conwell இறையியல் கல்லூரி கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.