2016-10-31 15:50:00

சுவீடனில் திருத்தந்தை பிரான்சிஸ் : முதல் நாள் நிகழ்வுகள்


அக்.31,2016. “தூய தந்தையே நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக(யோவா.17:11)” என்று, இயேசு, தம் இறுதி இரவு உணவின்போது செபித்தார். நம் ஆண்டவர் இயேசுவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில், கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காக, திருத்தந்தையர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இம்முயற்சிகளில் அதிகமாகவே தன்னை உட்படுத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக, உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, சுவீடன் நாட்டுக்கு, இத்திங்கள் காலை 8.20 மணிக்கு, A321 ஆல்இத்தாலியா விமானத்தில், இரு நாள்கள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். தன்னோடு பயணம் செய்த செய்தியாளர்களிடம், அவர்களின் பணிக்கு முதலில் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. இத்திருப்பயணம், முக்கியமானது. ஏனென்றால், இது, திருஅவை சார்ந்த ஒரு பயணம். கிறிஸ்தவ ஒன்றிப்புத் தளத்தில், இது மிகவும் திருஅவை சார்ந்தது. இதை, மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, உங்களின் பணி உதவும். மிக்க நன்றி என்று கூறினார் திருத்தந்தை. மேலும், தான் கடந்து செல்லும், இத்தாலி, ஆஸ்ட்ரியா, ஜெர்மனி மற்றும் சுவீடன் நாடுகளின் தலைவர்களுக்கு, தனது நல்வாழ்த்தையும், ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. லூத்தரன் சீர்திருத்தம் தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். எனவே, இப்பயணத்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணம் என்று நாம் பெயரிடலாம்.

கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சீர்திருத்த சபையினருக்குமிடையே, தற்போது நிலவும் நல்லுறவை இன்னும், சிறப்புறச் செய்யும் நோக்கத்தில், சுவீடன் நாட்டுக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின், Malmö நகர் பன்னாட்டு விமான நிலையத்தை, இத்திங்கள் முற்பகல் 11 மணிக்குச் சென்றடைந்தார். அப்போது, இந்திய நேரம், இத்திங்கள் மாலை 3 மணி 30 நிமிடங்களாகும். சுவீடன் பிரதமர் Stefan Lofven, அரசுப் பிரதிநிதிகள், உலக லூத்தரன் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், திருப்பீடத் தூதர் என, பல முக்கிய அதிகாரிகள் திருத்தந்தையை விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கு அரசு வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர், விமான நிலையத்தில், முக்கிய அதிகாரிகள் அறையில், திருத்தந்தையும், பிரதமர் Lofven அவர்களும், தனியே சந்தித்துப் பேசினர். அதன் பின்னர், அங்கிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்று, மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதேநேரம், திருத்தந்தையோடு சென்றிருக்கும் சில முக்கிய பிரதிநிதிகளுக்கு, Lund Grand விடுதியில், பிரதமர் விருந்தளித்தார். மதிய உணவை முடித்து, அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Lund நகரின் அரச மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவீடன் நாட்டின் அரசமைப்பின்படி, அது ஒரு முடியாட்சி நாடு. ஆனால் நாடாளுமன்றம், சனநாயக முறையில் இயங்குகிறது. சுவீடன் அரசரே நாட்டின் தலைவராவார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் அரசர் 16ம் கார்ல் குஸ்தாவ், அரசி சில்வியா ஆகிய இருவரையும் அரச மாளிகையில் சந்தித்தார். அரசரும், அரசியும், மாளிகையின் முகப்பிலே நின்று, திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும், திருத்தந்தையை, தனியே சந்தித்துப் பேசினர். பின்னர் பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு Pierluigi Isola அவர்கள் வடிவமைத்த அழகான பெரிய படம் ஒன்றை, திருத்தந்தை வழங்கினார். இதில் உரோம் நகரின் ஏழு ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பை முடித்து, Lund அரச மாளிகைக்கு அருகிலுள்ள Lund லூத்தரன் பேராலயம் சென்ற திருத்தந்தையை, சுவீடன் லூத்தரன் சபைத் தலைவர் பேராயர் Antje Jackelén, ஸ்டாக்கோல்ம் கத்தோலிக்க ஆயர் Anders Arborelius ஆகிய இருவரும் வரவேற்று, பேராலயத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில், முதலில் லூத்தரன் பேராயர் Jackelén, பின்னர் கத்தோலிக்க ஆயர் Arborelius ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லூத்தரன் பேராலயத்தில் உரையாற்றினார். இச்செப வழிபாட்டில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிசெய்யும் அறிக்கை ஒன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், LWF உலக லூத்தரன் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Mounib Younan அவர்களும் கையெழுத்திட்டனர். இவ்வறிக்கையின் சுருக்கத்தை, LWFன் உதவித் தலைவரான நார்வே நாட்டு ஆயர் Helga Byfuglien அவர்கள் வாசித்தார்.

Lund லூத்தரன் பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை நிறைவு செய்த திருத்தந்தை, பேராலயத்தில், சுவீடன் அரச குடும்பத்தினருடன் பவனியாகச் சென்று, அவர்களிடமிருந்து விடைபெற்று, அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மால்மோ சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில் கலந்துகொள்வது, கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழுவைச் சந்திப்பது.. இத்திங்கள் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 1, இச்செவ்வாயன்று, Swedbank திறந்தவெளி அரங்கத்தில், சுவீடன் நாட்டு கத்தோலிக்கச் சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு உரோம் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருங்கி வருவது, நன்மை பயக்கும், ஆனால், விலகி இருப்பது, கசப்புணர்வை அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப் பயண நோக்கம் நிறைவேற செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.