2016-10-29 15:34:00

திருத்தந்தை : கண்டனம் செய்யும் மொழியைக் கைவிடுவோம்


அக்.29,2016. "கண்டனம் செய்யும் மொழியைக் கைவிட்டு, இரக்கம் என்ற மொழியைத் தழுவிக்கொள்வோம்" என்ற சொற்கள், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் வெளியாயின.

மேலும், அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளான நவம்பர் 2, வருகிற புதன் மாலை 4 மணிக்கு, உரோம், ஃபிளமினோ கல்லறைத் தோட்டத்திற்கு முன்புறமுள்ள வளாகத்தில், திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் அகுஸ்தீனோ வல்லினி, அம்மறைமாவட்ட உதவியாளர்களில் ஒருவராகிய பேராயர் ஃபிலிப்போ இயானோனே, இன்னும் பிற ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், லூத்தரன் சீர்திருத்தம் தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கென, அக்டோபர் 31, வருகிற திங்களன்று, சுவீடன் நாடு செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் Lund லூத்தரன் பேராலயத்திலும், Malmöவிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

நவம்பர் 1, வருகிற செவ்வாயன்று, Swedbank திறந்தவெளி அரங்கத்தில், சுவீடன் நாட்டு கத்தோலிக்கச் சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு உரோம் வந்து சேருவார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது. இத்திருத்தூதுப்பயணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 17வது வெளிநாட்டுத்  திருத்தூதுப்பயணமாக அமையும்.   

ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றான சுவீடனில், 84 விழுக்காட்டினர் லூத்தரன் கிறிஸ்தவ சபையினர். கத்தோலிக்கர் 1.15 விழுக்காடு மட்டுமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.