2016-10-29 16:00:00

இறந்த குழந்தையை குப்பைகளில் போடுவது குற்றச் செயல்


அக்.29,2016. மும்பையில், இறந்த பெண் குழந்தையின் உடலை, சாலையோரம் போட்டுச் சென்றுள்ள செயலுக்கு எதிரான, தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

மும்பையில், நவஜீவன் சமூகக் குடியிருப்புப் பகுதிக்கருகில், குப்பைகளுக்கு மத்தியில், புதிதாகப் பிறந்த, பெண் குழந்தையின் உடல், எலிகளால் கடித்துக் குதறப்பட்டு கிடந்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த மும்பை துணை ஆயர் தோமினிக் சாவியோ பெர்னான்டெஸ் அவர்கள், மனித சமுதாயம், இன்னும், இத்தகைய கொடூரக் குற்றங்களைப் புரிவது அதிர்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

தங்களின் குட்டிகளை எவ்வித ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கு நேரம் வந்துள்ளது என்று கூறிய, ஆயர் பெர்னான்டெஸ் அவர்கள், தனது குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் போடும் எந்த விலங்கு பற்றியும் நாம் கேள்விப்பட்டதே இல்லை, ஆனால், மனிதர்கள் அதைச் செய்கிறார்கள் என்று, கவலை தெரிவித்தார்.

இக்கால உலகில், சிறாரே, குறிப்பாக, சிறுமிகளே, மிகவும் ஆபத்தை எதிர்கொள்ளும் உயிர்களாக உள்ளனர் என்றும், இவர்கள், தாயின் வயிற்றிலே கொல்லப்படுகின்றனர்  என்றும் கூறினார் ஆயர் பெர்னான்டெஸ்.

எலிகளால் கடித்துக் குதறப்பட்டு கிடந்த பெண் குழந்தையை, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்குழந்தையின் தலையிலும், நெஞ்சிலும் எண்ணற்ற காயங்கள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.