2016-10-28 14:54:00

நமக்காகச் செபிக்கும் இயேசு நம் வாழ்வின் மூலைக்கல்


அக்.28,2016. நமக்காகச் செபித்துக்கொண்டிருக்கும் இயேசு, கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வின் மூலைக்கல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார்.

திருத்தூதர்களான சீமோன், யூதாவின் விழாவாகிய இவ்வெள்ளியன்று, இயேசு தம் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தது பற்றிக் கூறும் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசு தம் வாழ்வின் அனைத்து முக்கிய தருணங்களில் செபித்தார் என்று கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு செபம் எவ்வளவு முக்கியமானது என்றுரைத்த திருத்தந்தை, திருஅவையின் மூலைக்கல்லாக இயேசு இருக்கின்றார், இயேசு இன்றி திருஅவையே கிடையாது, திருஅவையின் மூலைக்கல்லாகிய இயேசு நமக்காகச் செபித்துக்கொண்டிருப்பவர் என்றும் கூறினார்.

இயேசு மலைக்குச் சென்று, இரவெல்லாம் இறைவனிடம் வேண்டினார் என்றும், அதன் பின்னரே, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தல், குணப்படுத்தல், தீய ஆவிகளை விரட்டுதல், மக்கள் கூட்டம் பின்தொடர்தல், என எல்லா நிகழ்வுகளும் நடந்தன என்றும், தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, தம்மைப் பின்செல்பவர்களுக்காக, எப்போதும் எவ்வாறு செபித்தார் என்பதையும் விளக்கிய திருத்தந்தை, திருத்தூதர் பேதுரு, சாத்தானின் சோதனைகளை எதிர்த்து நின்று, விசுவாசத்தில் உறுதியாய் இருக்க, அவருக்காக இயேசு செபிப்பதாகத் தெரிவித்ததையும் குறிப்பிட்டார்.

நான் உனக்காகச் செபித்தேன், நான் உனக்காகச் செபிக்கின்றேன், நான் உனக்காக இப்போது செபித்துக்கொண்டிருக்கின்றேன் எனப் பேதுருவிடம், இயேசு கூறியதையே, இன்று என்னிடமும், உங்களிடமும், எல்லாரிடமும் கூறுகிறார் எனத் தெரிவித்த திருத்தந்தை, திருஅவையின் பேருண்மை பற்றி, நாம் சிந்திப்போம் என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.