2016-10-28 15:16:00

தென் சூடானைப் பார்வையிட திருத்தந்தை விருப்பம்


அக்.28,2016. கடும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடான் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விருப்பம் தெரிவித்தார் என, தென் சூடான் கத்தோலிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் குழுவை, வத்திக்கானில் சந்தித்து, அந்நாட்டின் நிலைமையைக் கேட்டறிந்த பின்னர், அந்நாட்டைப் பார்வையிடுவதற்கான தனது ஆவலை வெளியிட்டார் என, ஜூபா பேராயர் Paolino Lukudu Loro அவர்கள், கூறினார்.

திருத்தந்தையுடன் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, பேராயர் Lukudu Loro அவர்கள், தென் சூடானின் உள்நாட்டுப் போர், கொலைகள், புலம்பெயர்ந்தவர் நிலை, மற்றும் அந்நாட்டில் நிலவும் அச்சம் போன்றவைகளை, திருத்தந்தையிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தார்.

ஆப்ரிக்க நாடாகிய தென் சூடான், கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்குகின்றது என்றும் கூறினார் பேராயர் Lukudu Loro.

எழுபது விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்டிருக்கும், தென் சூடானின், கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் குழு, திருத்தந்தையின் அழைப்பின்பேரில் வத்திக்கான் வந்து, திருத்தந்தையைச் சந்தித்துப் பேசியது.

பல ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின்னர், 2011ம் ஆண்டில், தென் சூடான், சூடான் நாட்டிலிருந்து விடுதலையடைந்தது.

உலகின் இளமையான நாடாகிய தென் சூடான், அண்மை மாதங்களில், கடும் உள்நாட்டுப் போரைச் சந்தித்துள்ளது. அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir அவர்களுக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் அரசுப் படைகளுக்கும், முன்னாள் உதவி அரசுத்தலைவர் Reik Machar அவர்களுக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் படைகளுக்கும் இடையே இப்போர் இடம்பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.