2016-10-28 15:29:00

சுற்றுச்சூழலைப் பாதிக்காத தீபாவளிக்குப் பரிந்துரை


அக்.28,2016. தீபாவளித் திருவிழாவை, சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்காமல் சிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, இந்திய கத்தோலிக்க நிறுவனங்கள்.

விளம்பரத் தட்டிகள், ஊர்வலங்கள், வீதி நாடகங்கள் போன்றவை வழியாக, காற்றை மாசுபடுத்தும் மற்றும் ஒலிப் பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கொளுத்த வேண்டாமென்று, கத்தோலிக்க நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், பள்ளி மாணவர்கள், தங்கள் பகுதிகளில், “ஒளியேற்றுவோம், பட்டாசுகளைத் தவிர்ப்போம்” என்று அறிவித்து, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஜலந்தர் ஆயர் Franco Mulakkal.

விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் ஏற்றுங்கள் என்று, பள்ளிச் சிறாரைக் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் Mulakkal அவர்கள், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் நலவாழ்வுக்கும், ஊறு விளைவிக்கும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமெனக் வலியுறுத்தியுள்ளார்.  

புதுடெல்லி உயர்மறைமாவட்ட, செத்னாலயா சமூகநலப்பணி மையமும், சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்காத தீபாவளி பற்றிய தகவல்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், Tarumitra தேசிய நிறுவனத்தை அமைத்தவருமான இயேசு சபை அருள்பணி Robert Athickal அவர்கள், இந்தியாவில், ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.