2016-10-27 15:51:00

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய இத்தாலி


அக்.27,2016. "மத்திய இத்தாலியில் மீண்டும் புதிதாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் செபத்தின் வழியே நான் இணைந்துள்ளேன்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 27, இவ்வியாழன் காலை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

அக்டோபர் 26 இப்புதனன்று மாலை 7.11 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலும், இரவு 9.18 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் உருவான இரு நிலநடுக்கங்களால் மத்திய இத்தாலியின் செல்லானோ (Sellano) மற்றும் விஸ்ஸோ (Visso) பகுதிகளில் பெரும் சேதங்கள் உருவாகியுள்ளன.

இவ்வாண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி அதிகாலையில், மத்திய இத்தாலியின் அமாத்ரிச்சே  (Amatrice) பகுதியில் உருவான நிலநடுக்கங்களால் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இப்பகுதிக்கு அருகே, அக்டோபர் 26, இப்புதனன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களில், உயிர் சேதம் ஏதுமில்லை எனினும், பழமை வாய்ந்த பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று Spoleto-Norcia உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

Campi di Norcia என்ற இடத்தில் இருந்த உலக இரட்சகர் ஆலயம் பெருமளவு இடிந்து விழுந்தது என்றும், அருகிலிருந்த புனித Eutizio துறவு மடத்தின் முகப்பு, முற்றிலும் தரைமட்டமானது என்றும் Spoleto-Norcia உயர் மறைமாவட்டத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.