2016-10-27 15:58:00

2ம் ஜான்பால் பாப்பிறை நிறுவனத்தினருடன் திருத்தந்தை


அக்.27,2016. அயலவர் பற்றிய அக்கறையைக் குறைத்து, தன்னைப்பற்றிய அக்கறையை மட்டுமே வளர்க்கும் இன்றைய உலகிற்கு ஒரு மாற்று அடையாளமாக, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் உருவாக்கிய கல்வி நிறுவனம் பொருள் மிகுந்த ஒரு முயற்சி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறைக் கல்வி நிறுவனம் தன் 35வது கல்வி ஆண்டைத் துவங்கும் வேளையில், இந்நிறுவனத்தைச் சேர்ந்த 400க்கும் அதிகமானோரை இவ்வியாழன் காலை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார்.

தொடர்புத் துறையில் பல்வேறு தொழில் நுட்பங்கள் முன்னேறி வந்தாலும், ஆண் பெண் உறவில் முன்னேற்றங்கள் குறைந்து வருவதைக் காண முடிகிறது என்று கூறியத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் பாப்பிறைக் கல்வி நிறுவனத்தின் வழியே, உறவுகளையும், உயிர்களையும் போற்றி வளர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'நான்' என்ற நிலையிலிருந்து 'நாம்' என்ற நிலை நோக்கியும், தனிப்பட்டவர் என்ற நிலையிலிருந்து, சமுதாயம் என்ற நிலை நோக்கியும் முன்னேறிச் செல்லவும், ஆணும், பெண்ணும் சரி நிகர் உரிமைகளும், மதிப்பும் பெறும் சூழலை உருவாக்கவும் புனித 2ம் ஜான்பால் பாப்பிறைக் கல்வி நிறுவனம் பணியாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.