2016-10-26 15:50:00

ஒப்புரவை வளர்ப்பதற்கு பெண்கள் ஆற்றக்கூடிய பணிகள் ஏராளம்


அக்.26,2016. மோதல்களையும், போர்களையும் தடுப்பதற்கும், சமரச முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், ஒப்புரவை வளர்ப்பதற்கும் பெண்கள் ஆற்றக்கூடிய பணிகள் ஏராளம் என்பதை, திருப்பீடம் நீண்ட காலமாய் வலியுறுத்தி வந்துள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில், 'பெண்கள், அமைதி, பாதுகாப்பு' என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொண்ட உரையாடலில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இந்தத் தலைப்பை, இரஷ்ய நாடு, இந்த அவையில் கொணர்ந்திருப்பது குறித்து, மகிழ்ச்சியை வெளியிட்டார்.

ஒப்புரவை உருவாக்குவது, மறுவாழ்வளிப்பது, கட்டியெழுப்புவது என்ற பல நிலைகளில், பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு மிகச் சிறந்தது என்றும், மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெண்களுக்கு அதிகம் உண்டு என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகை மீண்டும் அமைதியில் வளர்ப்பதற்கு மிகத் தேவையாக இருக்கும் பெண்களுக்கு, கல்வி உரிமையும், வசதிகளும் உடனடியாக தரப்படவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மழலையர் பள்ளி முதல், மேற்கல்வி முடிய பல நிலைகளில் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

இவ்வுலகில் இன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், மோதல்கள் துவங்க எவ்வகையிலும் காரணமாகாத பெண்கள், அந்த மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்படுவது, ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.