2016-10-26 15:28:00

இவ்வுலகைச் சூழ்ந்துள்ள இரக்கம் என்ற பெருங்கடல் - திருத்தந்தை


அக்.26,2016. இன்று உலகில் பரவிவரும் வெறுப்பும், வன்முறையும், இவ்வுலகைச் சூழ்ந்துள்ள இரக்கம் என்ற பெருங்கடலை எதிர்த்து நிற்க இயலாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

"மன்னிப்பதற்கு அஞ்சாதீர்கள்" என்ற தலைப்பில், அக்டோபர் 25, இச்செவ்வாயன்று வெளியான ஒரு நூலுக்கு திருத்தந்தை வழங்கியுள்ள அணிந்துரை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில், 'அன்னையின் உதரத்தைப் போல்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புவனஸ் அயிரஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக இருந்தவேளையில், அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்குவதில் புகழ்பெற்றிருந்த அருள்பணி Luis Dri அவர்கள், தன் அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள இந்நூலுக்கு, திருத்தந்தை அணிந்துரை வழங்கியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் வேளையில், தான் மிக எளிதாக பாவங்களை மன்னித்து விடுகிறோமோ என்ற சந்தேகம், தன்னைத் தாக்கும்போதெல்லாம், கிறிஸ்து அவ்விதம் மிகத் தாராளமாக மன்னிப்பு வழங்கியது தனக்கு உறுதியளித்துள்ளது என்று, அருள்பணி Luis Dri அவர்கள், தன்னிடம் பகிர்ந்துகொண்டதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்கு வரும் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக அங்கு வந்தாலும், அவர்கள் அனைவரும் இறைவனின் இரக்கத்தைச் சுவைக்க வேண்டும் என்பதில்தான் அருள்பணியாளர் கருத்தாய் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

காணாமற்போய் திரும்பிவந்த மகனை அணைக்கும் தந்தையை ஓவியர் Rembrandt அவர்கள் வடித்துள்ளதை, தன் அணிந்துரையில் கூறும் திருத்தந்தை, மகனை அணைக்கும் தந்தையின் இரு கரங்களில், ஒன்று, ஆணின் கரமாகவும், மற்றொன்று பெண்ணின் கரமாகவும் வரையப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, தாயும் தந்தையுமாக இருக்கும் இறைவனின் இரக்கம் நம்மை அணைக்க எப்போதும் காத்திருக்கிறது என்று தன் அணிந்துரையில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.