2016-10-26 15:40:00

அனைத்து அமைதி முயற்சிகளிலும் பெண்கள் மையமாக வேண்டும்


அக்.26,2016. உலகின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சிகளில் பெண்களுக்கு பங்களிப்பது மிக அவசியம், மற்றும், அவசரம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்தார்.

'பெண்கள், அமைதி, மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில், 2000மாம் ஆண்டு ஐ.நா. அவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் 16ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற ஓர் கருத்துப் பரிமாற்றத்தில் பேசிய பான் கி மூன் அவர்கள், ஐ.நா. அவை மேற்கொள்ளும் அனைத்து அமைதி முயற்சிகளிலும் பெண்கள் மையமாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமைதி மற்றும் ஒப்புரவு முயற்சிகளில் இத்தனை ஆண்டுகளாக பெண்களுக்கு இடம் அளிக்காததால், அதன் விளைவுகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம் என்று கூறிய பான் கி மூன் அவர்கள், இனியும் தொடர்ந்து இத்தவறை நாம் செய்வது, நம்மை அதிக ஆபத்தில் ஆழ்த்திவிடும் என்று தன் உரையில் எச்சரித்தார்.

தென் சூடான் நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு மோதல்களில், அங்கு, பெண்கள் மேற்கொண்டுவரும் ஒப்புரவு முயற்சிகள் குறித்து, இம்முயற்சிகளை ஒருங்கிணைக்கும் EVE என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவர், Rita Lopidia அவர்கள், தங்கள் இயக்கத்தின் ஆக்கப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.