2016-10-25 15:15:00

திருத்தந்தை, வெனிசுவேலா அரசுத்தலைவர் சந்திப்பு


அக்.25,2016. “வாழ்வுக்குச் சேவையாற்றுவதை மையப்படுத்தும் அரசியலும், பொருளாதாரமும் இன்றைய அவசரத் தேவையாக உள்ளது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், கடந்த நவம்பரிலிருந்து, இறந்த அனைத்து கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம சாந்திக்காக, வருகிற நவம்பர் 4ம் தேதி, காலை 11.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், வெனிசுவேலா நாட்டு அரசுத்தலைவர் Nicolás Maduro அவர்களை, இத்திங்கள் மாலையில், வத்திக்கானில் சந்தித்து, அந்நாட்டின் தற்போதைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெனிசுவேலா நாடு, கவலைதரும் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சூழலை எதிர்நோக்கிவரும் இவ்வேளையில், அந்நாட்டு மக்களின் துன்பங்களைத் துடைப்பதற்கு, உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.