2016-10-24 16:23:00

திருத்தந்தையுடன் இணைந்து பணிபுரிவதே இயேசு சபையின் மறைப்பணி


அக்.24,2016. ஆன்மாக்களுக்கு உதவுவதற்கும், இறைவனுக்கான சேவையில் உயரிய பணிகளை ஆற்றுவதற்கும் எங்கெல்லாம் வாய்ப்புக்கள் உள்ளனவோ, அப்பகுதிகளுக்கெல்லாம் உலகில் சென்று பணியாற்றுவதே இயேசு சபையினர் பெற்றுள்ள அழைப்பு என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அகில உலக இயேசு சபையினரின், 36வது பொதுப் பேரவைக்கூட்டத்திற்கு இத்திங்கள் காலை சென்று, அதில் பங்குபெறுபவர்களைச் சந்தித்து, உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையுடன் இணைந்து சுதந்திரமாகவும் கீழ்ப்படிதலுடனும் பயணம் செய்து, ஏனையோர் செல்ல தயங்கும் இடங்களில் கூட பணிபுரிவதே இயேசு சபையினரின் மறைப்பணி என எடுத்துரைத்தார்.

'இறைவனின், மிக உன்னத மகிமைக்காக, கிறிஸ்துவின் அன்பில் ஒன்றிணைந்தவர்களாக, தாழ்ச்சியுடனும், சுதந்திரத்துடனும் இணைந்து நடப்போம்' என திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 32வது பொதுப்பேரவையில் கலந்துகொண்டோருக்கு ஆற்றிய உரையிலிருந்த வார்த்தைகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'திருஅவைக்கு இயேசு சபையினரின் பணி தேவை, அவர்களை நோக்கி அது முழு நம்பிக்கையுடன் திரும்புகிறது, குறிப்பாக ஏனையோர் அணுக முடியாத இடங்களில் பணிபுரிவதற்கு' என 2008ம் ஆண்டு 35வது பொது அமர்வில் பங்குபெற்றோருக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் பேசியதையும் நினைவூட்டினார்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இலயோலாவின் புனித இக்னேசியஸ் அவர்கள், இரக்க நடவடிக்கைகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்துவத்தை நினைவுகூர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது ஒரு வாழ்க்கைமுறை, அது நம் அயலாரை தொடுவதாக இருக்கவேண்டும் எனவும் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களின் வாழ்வில் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கொணர்வது, இயேசு சபையினரின் முக்கியப்பணியாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

நற்செய்தி அறிவிப்பதில் கிட்டும் மகிழ்ச்சி, குடும்பங்களின் மகிழ்ச்சி,  திருவையின் மகிழ்ச்சி, இயற்கையின் மகிழ்ச்சி போன்றவைகள் தீயவனால் திருடப்பட்டுவிடாதபடிக்கு நாம் செயல்படவேண்டும் எனவும், இயேசு சபையினரை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலை இயேசு சபையினரின் தலைமை இல்லத்தில், 36வது பொது அமர்வில் கலந்து கொள்வோரை சந்திக்கச் சென்ற திருத்தந்தையை, இயேசுசபையின் புதிய தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா (Arturo Sosa)  அவர்கள் வரவேற்றுப் பேசினார். 

இயேசு சபை முழுவதும் முன்வைத்துள்ள முக்கியக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், திருத்தந்தையின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் நிறைந்தது என, இயேசு சபை புதியத் தலைவர், அருள்பணி சோசா அவர்கள் கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.