2016-10-24 16:38:00

திருத்தந்தை : ஈராக் நாட்டின் துன்பம் நீங்க செபியுங்கள்


அக்.24,2016. ஈராக் நாட்டில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிவரும் மக்களுக்காக, குறிப்பாக மொசூல் நகரில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகளுக்காக சிறப்பான விதத்தில் செபிப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைபரப்புப்பணி ஞாயிறான இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 80 ஆயிரம் விசுவாசிகளுக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, நீண்ட காலமாக ஈராக்கில், குறிப்பாக மொசூல் நகரில் அப்பாவி மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் கொடூர நிகழ்வுகள் குறித்து நம் இதயங்கள் அதிர்ச்சியடைகின்றன என்று கூறினார்.

அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகள் கொடூரமாக கொல்லப்படுள்ள செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய செயல்களால், நாம், பேச வார்த்தைகளின்றி, கண்ணீர் வடிக்கிறோம் எனவும் கூறினார்.

இம்மக்களுடன் ஒருமைப்பாட்டின் வார்த்தைகளை வெளியிடும் அதேவேளை, ஈராக் நாட்டில் பாதுகாப்பும், ஒப்புரவும் அமைதியும் நிறைந்த வருங்காலம் உருவாக செபிக்கவும் உறுதி கூறுகிறேன் என்ற திருத்தந்தை, ஈராக் நாட்டிற்காக செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.