2016-10-24 16:15:00

இறைவனின் சட்டங்கள் வழங்குவது குழந்தைகளுக்குரிய விடுதலையை


அக்.24,2016. சட்டங்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவது என்பதில், இரட்டை வேடமும், சட்டத்திற்கு அடிமைகள் என்பதும் ஒளிந்திருக்கும் அதேவேளை, இறைவன் நமக்கு சுதந்திரம், நன்மைத்தனம், எளிய அணுகுமுறை போன்றவைகளை வழங்கியுள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி வாசகம் முன்வைத்த, 'பதினெட்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த பெண்ணை ஓய்வு நாளில் இயேசு குணமாக்கிய புதுமை’ குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.

இயேசு ஓய்வுநாளில் குணம் வழங்கியதால் கோபமுற்ற தொழுகைக்கூடத் தலைவரின் செயலைக் கண்டு இயேசு கடிந்ததுடன், அவரை வெளிவேடக்காரரே என அழைப்பது, இறைவனின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்தைக் கொண்டிராமல், சட்டத்திற்கு அடிமையாகி, அதை நிறைவேற்றுவதில் இறுகிய மனநிலையைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது என்றார் திருத்தந்தை.

இறைவனின் சட்டங்கள் என்பவை, நம்மை அடிமையாக்க அல்ல, மாறாக,  நம்மை விடுவிக்கவும், நம்மை இறைவனின் குழந்தைகளாக மாற்றவும் உதவுகின்றன என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டத்தைக் கடைபிடிப்பதில் இறுக்கத்துடன் செயல்படுவது என்பது, இறைவனால் வழங்கப்பட்ட கொடை அல்ல, மாறாக, எளிமைத்தனமும், நன்மைத்தனமும், மன்னிக்கும் மனப்பன்மையுமே இறைவனால் வழங்கப்படும் கொடைகள் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கட்டளைகளை அச்சுப்பிசகாமல் பெரும் இறுக்கத்துடன் கடைப்பிடிப்பவரின் பின்னால், இறைவனின் குழந்தைகளுக்குரிய சுதந்திரம் இல்லாமல், ஒருவித வேதனையே தொக்கி நிற்பதால், அவர்கள், வெளிப்பார்வைக்கு நிறைவடைந்தவர்கள்போல் காட்சியளித்தாலும், அவர்கள் தீயவர்களாக, நோயாளிகளாக, வெளிவேடக்காரர்களாகவே உள்ளனர் என மேலும் கூறினார், திருத்தந்தை.

தன் மறையுரையின் இறுதியில் 'ஊதாரி மைந்தர்' உவமை குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, சட்டத்தை மீறி, அதை விட்டு விலகிச் சென்ற இளைய மகனையும், திருந்தி வந்த தன் சகோதரனை ஏற்க மறுத்த மூத்த மகனின் இறுக்கத்தையும் ஒப்புமைப்படுத்திக் கூறினார்.

இறைவன் நம்மிடம் நன்மைத்தனத்தையும், எளிமையையும் இரக்கத்தையும் தாழ்ச்சியையும் விரும்புகிறார் என்பதை, நம் சகோதர சகோதரிகள் உணரவேண்டும் என அவர்களுக்காக செபிப்போம் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.