2016-10-22 15:17:00

திருத்தந்தை 2ம் ஜான் பால் விழாவன்று போலந்து திருப்பயணிகள்


அக்.22,2016. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருவிழாவான அக்டோபர் 22, இச்சனிக்கிழமையன்று, யூபிலி மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்குச் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டை முன்னிட்டு, உரோம் நகருக்குத் திருப்பயணமாக வந்திருக்கும் பெருமளவான போலந்து கத்தோலிக்கர் மற்றும் ஆயர்கள் பற்றிக் குறிப்பிட்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகளை, மனதிலும், இதயங்களிலும், ஒலிக்க விடுங்கள் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று, சரியாக, 38 ஆண்டுகளுக்கு முன்னர், ஏறக்குறைய இந்த நேரத்தில், இந்த வளாகத்தில், “அஞ்சாதீர்கள்..., கிறிஸ்துவுக்கு உங்கள் கதவுகளை அகலத் திறங்கள்” என, உலகின் அனைத்து மக்களுக்கும் ஒலித்த குரலைக் கேட்டீர்கள் என, 1978ம் ஆண்டு அக்டோபர் 22ம் நாளன்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருப்பலியில் கூறியதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமையன்று, யூபிலி மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்களிடம், உலகுக்கும், மனித சமுதாயத்துக்கும், இரக்கத்தின் நற்செய்தியை இடைவிடாமல் அறிவித்தவர் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், இந்நற்செய்தியையே இந்த யூபிலி ஆண்டு தொடர்கின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை2ம் ஜான் பால் அவர்கள், 26 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருஅவைத் தலைமைப் பணியில், 129 நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலக இளையோர் தினத்தை அவர் உருவாக்கியுள்ளார். பெர்லின் சுவர் வீழ்வதற்கு, ஒரு காரணமாகவும் இவர் இருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.