2016-10-21 15:40:00

மனித வர்த்தகம், வலுவற்றவரை சந்தைப் பொருள்களாக மாற்றுகின்றது


அக்.21,2016. மனித வர்த்தகம், அடிப்படை மனித உரிமைகளை பெருமளவில் மீறுகின்றது மற்றும், மனிதர்களை, குறிப்பாக, வலுவற்றவர்களையும், பாதுகாப்பற்றவர்களையும், சந்தைப் பொருள்களாக மாற்றுகின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மனித வர்த்தகம் குறித்து, வியன்னாவில் நடந்த OSCE அமைப்பின் கருத்தரங்கில், இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள், இவ்வாறு கூறினார்.

“மனித வர்த்தகம், அதற்குப் பலியானவர்கள் மற்றும் மனித வர்த்தகத்தின் புதிய வளர்ச்சி” குறித்து, இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேரருள்திரு Urbanczyk அவர்கள், மனித வர்த்தக வலையமைப்பு, ஐரோப்பாவில் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இப்பிரச்சனையை எதிர்கொள்வதற்குப் போதுமான கொள்கைகள் கிடையாது என்று தெரிவித்தார்.

மனித வர்த்தகம் குறித்த பிரச்சனையைக் களைவதற்கு, உலக அளவில் மிகுந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும், இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை, பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார் பேரருள்திரு Urbanczyk.

புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோரின் வருகையை விவரிப்பதற்கு, ஊடகங்கள், எதிர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துகின்றன என்றுரைத்த பேரருள்திரு Urbanczyk அவர்கள், இம்மக்களின் மாண்பையும், அவர்களின் துன்பங்களையும், நம்பிக்கையையும் நேர்மறையாக விவரிப்பதை, அரசுகள் ஊக்குவிக்குமாறு வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.