2016-10-21 15:08:00

கிறிஸ்தவர்கள் ஒன்றிப்புக்காகப் பணியாற்ற அழைப்பு


அக்.21,2016. திருஅவையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு, தாழ்மை, இரக்கம், பொறுமை ஆகிய மூன்று பண்புகளும் முக்கியமானவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் மறையுரையில் கூறினார்.

பொறாமை, அழுக்காறு, சண்டை சச்சரவு ஆகியவற்றை, கிறிஸ்தவர்கள், விலக்கி நடக்க வேண்டுமென்று, இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலி மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்ற நம் ஆண்டவரின் வாழ்த்தை மையப்படுத்தி, மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, அமைதி இல்லையெனில், இந்த வார்த்தையின் பரந்த பொருளில், நாம் ஒருவரையொருவர் வாழ்த்த இயலாது என்றும் கூறினார்.

தீய உணர்வு, சண்டைகள், பொறாமை, அழுக்காறு, புறணி பேசுதல்.. போன்றவற்றை, எப்போதும் விதைக்கிறது, இவை, அமைதியைக் குலைக்கின்றன, அதனால் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் எப்போதும், ஒற்றுமைக்கான வழிகளைத் தேட வேண்டும் என்று கூறினார்.

திருஅவையின் பேருண்மை, கிறிஸ்துவின் உடலின் பேருண்மையாகும் என்பதால், இதை மட்டுமல்லாமல், திருஅவையின் பேருண்மையாகிய, ஒன்றிப்பின் பேருண்மையையும் நாம் புரிந்துகொள்வதற்கு, தூய ஆவியாரிடம் அருள் வேண்டுவோம் என்று, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.            

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.