2016-10-21 15:20:00

இது இரக்கத்தின் காலம்...: ஏமாற்றங்களுக்கான விதை பேராசையே!


ஓர் ஊரில் குரங்குகள் மிக அதிகமானதால், அவ்வூரில் உள்ளவர்கள் மிகவும் துன்புற்றனர். திடீரென அவ்வூருக்கு வந்த ஒரு முதலாளியும் அவருடைய வேலைக்காரரும், ‘எங்களுக்கு குரங்குகள் அதிகமாக தேவை. ஒரு குரங்கை பிடித்து வந்தால் 10 ரூபாய் தருகிறோம்’ என்று கூறினார்கள். மக்கள் அனைவரும், ஆளாளுக்கு 50, 60 என பிடித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டார்கள். குரங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததால், விலையை அதிகமாக்கி  20 ரூபாய் என அறிவித்தார்கள். அப்பொழுதும் 10, 20 என பிடித்துக் கொடுத்து பணத்தையும் பெற்றார்கள் மக்கள். இப்போது குரங்குகளின் எண்ணிக்கை மிக குறைந்து விட்டது. இன்னும் நிறையத் தேவைப்படுகிறது என அறிவித்த முதலாளி, அவசர வேலை என ஊருக்குச் சென்றார். அப்போது ஊரில் உள்ள சில மனிதர்களிடம் இரகசியம் ஒன்றை வேலையாள் கூறினார். ‘இனி குரங்கின் விலை, ஒன்றுக்கு 100 ரூபாய் ஆகப்போகிறதாம். முதலாளி இப்பதான் போன்ல சொன்னாரு’ன்னு சொன்ன வேலையாள், ‘நீ என்கிட்டே ரொம்ப பழகிட்டே, உனக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. ஒரு குரங்கை 40 ரூபாய்க்குத் தரேன். அதனால 60 ரூபாய் உனக்கு இலாபம் வரும்’ என்று கொளுத்திப்போட, ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் குரங்குகளை, பணம் கொடுத்து வாங்கிக்கொண்டனர்.

இப்போது வேலையாளும் இடத்தைக் காலி செய்ய, ஊரில் உள்ள மக்களோ, தாங்கள் 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் விற்ற குரங்கை, 40 ரூபாய் கொடுத்து வாங்கி, குரங்குகளுடன் வாழ்கின்றனர். முதலாளியும், வேலையாளும் வேறொரு ஊரில், பணத்தை எண்ணிக்கொண்டு, ‘முட்டாள்கள்’ என்று ஊர்மக்களை எண்ணி, சிரித்துக்  கொண்டிருக்கின்றனர்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.