2016-10-20 15:53:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு திருத்தந்தையின் உதவி


அக்.20,2016. திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கென ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் லாட்டரி குலுக்கல் சீட்டுகள் இன்று முதல் 2017ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முடிய விற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் ஆண்டாக நடைபெறும் இந்த லாட்டரி குலுக்கலில் திரட்டப்படும் நிதி, இம்முறை, மத்திய இத்தாலியில் ஆகஸ்ட் 24ம் தேதி இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அக்டோபர் 20, இவ்வியாழன் காலை, புர்கினா பாஸோ அரசுத் தலைவர், Rock Marc Christian Kaboré அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்துப் பேசினார்.

வத்திக்கான், மற்றும் புர்கினா பாஸோ நாடுகளுக்கிடையே நிலவும் நல்லுறவு குறித்தும், புர்கினா பாஸோ நாட்டில், கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில், காத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்டன.

புர்கினா பாஸோ நாட்டில் பல்வேறு சமயங்களுக்கிடையே தேவைப்படும் உரையாடல், ஒப்புரவு குறித்தும், இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும், அரசுத் தலைவர் Kaboré அவர்கள், திருத்தந்தையுடன் கலந்து பேசினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், அரசுத் தலைவர்  Kaboré அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.