2016-10-19 15:29:00

புவனேஸ்வர் மருத்துவ மனை தீ விபத்திற்கு பேராயரின் இரங்கல்


அக்.19,2016. புவனேஸ்வர் நகரின் SUM மருத்துவ மனையில் நிகழ்ந்த விபத்தால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கட்டக் புவனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள், தன் ஆழந்த வருத்தங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால், ஏற்கனவே மனமுடைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, அங்கு நடைபெறும் விபத்து இன்னும் பெரும் வேதனையைத் தருவது உறுதி என்று, பேராயர் பார்வா அவர்கள், தன் அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

1000 பேர் தங்கியுள்ள SUM என்ற தனியார் மருத்துவ மனையில், இத்திங்கள் இரவு நடைபெற்ற ஒரு தீவிபத்தின் காரணமாக, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுப் புகை பரவியதால், தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்தோர் உட்பட, 22 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

தீவிபத்தை தவிர்ப்பதற்கும், சமாளிப்பதற்கும், மருத்துவ மனைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழி முறைகள், SUM மருத்துவமனையில் பின்பற்றப்படவில்லை என்பதே இவ்விபத்தின் காரணம் என்று ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.