2016-10-19 15:37:00

பாத்திமா அன்னை திருத்தலத்தில் ஆயர்களின் கூட்டம்


அக்.19,2016. கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் கூட்டம், அக்டோபர் 20 இவ்வியாழன் முதல், 23, ஞாயிறு முடிய, போர்த்துக்கல் நாட்டின், பாத்திமா அன்னை திருத்தலத்தில் நடைபெறுகிறது.

பாத்திமா அன்னை திருத்தலம், 2017ம் ஆண்டு தன் நூற்றாண்டைச் சிறப்பிக்கவுள்ள வேளையில், போர்த்துக்கல் ஆயர் பேரவையின் தலைவரும், லிஸ்பன் முதுபெரும் தந்தையுமான, கர்தினால் மானுவேல் கிளமென்டே (Manuel Clemente) அவர்களின் அழைப்பின் பேரில், இந்தக் கூட்டம், பாத்திமா திருத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியொனார்தோ சாந்திரி அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்களும் கலந்துகொள்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் குடிபுகுந்துள்ள கீழைவழிபாட்டு முறை கத்தோலிக்கர்களின் மேய்ப்புப்பணியை மையப்படுத்தி நடைபெறும் இக்கூட்டத்தில், பிரான்ஸ், ஜெர்மனி, போர்த்துக்கல், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பணியாற்றும் 15 கீழை வழிபாட்டு முறை திருஅவைகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.