2016-10-18 15:22:00

மத சகிப்பற்றதன்மை ஆசியாவைப் புண்படுத்துகின்றது


அக்.18,2016. இந்து, புத்தம், ஜைனம், கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய பெரிய மதங்களுக்கு அன்னையாக விளங்கும் ஆசியாவில் தற்போது காணப்படும் மத சகிப்பற்றதன்மை, அச்சமுதாயத்தை, நஞ்சாகக் கெடுக்கின்றது என்று, ஆசிய கர்தினால் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இயேசு சபை அருள்பணியாளர் Michael Kelly அவர்கள் எழுதிய "On the Brink" என்ற நூலை, யாங்கூனில் வெளியிட்டுப் பேசிய, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், பங்களாதேஷ், இலங்கை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம் போன்ற பல நாடுகளில், ஏன், மியான்மாரிலும், மத சகிப்பற்றதன்மை பரவியுள்ளது என்று கூறினார்.

ஆசிய நாடுகளில் சிறுபான்மை மதத்தவரின் நிலைமை பற்றிக் கூறும் இந்நூலை,  ஆசியாவில் மத சுதந்திரம் பற்றிய ஒரு மகா சாசனமாக, தான் நோக்குவதாக உரைத்த கர்தினால் போ அவர்கள், ஒருவர் தனது மனச்சான்றின்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்குரிய சுதந்திரம், புனிதமான கோட்பாடு என்றும், ஆசியாவில், இது தற்போது மீறப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.  

சனநாயக சமுதாயங்களில் சிறுபான்மை மதத்தவருக்கெதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்றன என்றும் கூறிய யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், மியன்மாரில், இரு புத்தத் துறவிகள் இயக்கங்கள், முஸ்லிம்களைத் துன்புறுத்துகின்றன என்றும், இக்குழுக்களின் நடவடிக்கைகள், புத்தமதப் போதனைகளைக் கேலி செய்வதாக உள்ளன என்றும் கூறினார்.

தற்போது இந்த புத்தத் துறவிகள் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட கர்தினால் போ, வெறுப்பின் இருள் மேகங்கள், ஆசியாவைச் சூழ்ந்து வருகின்றன என்றும் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.