2016-10-18 15:48:00

இந்திய பாகிஸ்தான் அமைதிக்காக இந்திய கத்தோலிக்கர்கள் செபம்


அக்.18,2016. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, மோதல் போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், இரு நாடுகளிடையே அமைதிக்காக கத்தோலிக்கத் தலைவர்கள் புது டெல்லியில் கூடிச் செபித்தனர்.

இந்தியா மிகத் தீவிர சவால்களை, குறிப்பாக, அதன் எல்லைப்புறங்களில் சந்தித்து வருவதாக உரைத்த இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவின் அனைத்து 168 மறைமாவட்டங்களும், இரு நாடுகளின் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பல்வேறு மொழிகளை, கலாச்சாரங்களை, உணவு முறைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே நாடு என்ற உணர்வுடன் சென்று கொண்டிருக்கும் இந்தியாவை, ஏனைய நாடுகளும் அமைதியின் நாடாக நோக்குவதாக உரைத்த Gurgaon ஆயர் ஜேக்கப் பர்னபாஸ் அவர்கள், இதே அமைதியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வோர் இந்தியரின் கடமையும், பொறுப்புணர்வுமாகும் என்றார்.

இதே அமைதி செப வழிபாட்டில் கலந்துகொண்ட இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தியோடர் மஸ்கரினாஸ் அவர்கள், பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கிவரும், இந்திய நாட்டிற்காகச் செபிக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை என்றார்.

காஷ்மீர் பகுதி குறித்த பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.