2016-10-17 14:35:00

வாரம் ஓர் அலசல் – வறுமை ஒழிய என் பங்கு!


அக்.17,2016. அந்தப் பணக்கார வீட்டில் ஒவ்வொரு நாளும் அறுசுவை விருந்துதான். அந்த வீட்டில் வேலை செய்யும் ஏழைச் சிறுமி ஒருவர், தினமும் உணவுகளை மேசையில் எடுத்து வைத்துவிட்டு, அவர்கள் சாப்பிடுவதை, மறைந்திருந்து பார்த்து ஏங்குவார். அன்று மட்டன் பிரியாணி. அந்தக் குடும்பத்தினர் சாப்பிட்டு முடிந்ததும், வீட்டு எஜமானி, அச்சிறுமியைக் கூப்பிட்டு, சாப்பாட்டுத் தட்டை எடுத்துவரச் சொன்னார். அட.. நமக்கு இன்று பிரியாணி என்று, ஆசையோடு தட்டை நீட்டினார் சிறுமி. ஆனால் அதில் மீதமிருந்த பிரியாணியை வைத்து, அதைச் செல்ல நாய்க்கு வைக்கும்படிக் கூறி விட்டார் எஜமானி. தனது வீட்டில் பசியால் வாடும் நோயாளி அம்மாவையும், தம்பியையும் நினைத்து மனதில் அழுதுகொண்டே, நாய்க்கு அந்தச் சாப்பாட்டை வைத்தார் சிறுமி. பின்னர், அச்சிறுமிக்கு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பழைய சோறு மட்டுமே கிடைத்தது. பசியோடு வீட்டுக்குச் சென்ற சிறுமி, தான் கொண்டுபோயிருந்த சிறிதளவு அரிசியை சமைத்து, அம்மாவுக்கும் தம்பிக்கும் பரிமாறினார். தனது தட்டில் சிறிதளவு சோற்றை வைத்து, சாப்பிடத் துவங்கியபோது, அக்கா பசிக்குது, சோறு வேணும் என்று கேட்டான் தம்பி. தனது தட்டில் இருந்ததையும் தம்பிக்குக் கொடுத்துவிட்டு, தண்ணீரைக் குடித்து, பசியோடு உறங்கச் சென்றார் சிறுமி. அன்புள்ளங்களே, ஒவ்வொரு நாளும் எத்தனையோ வீடுகளில் இந்த நிலையை நாம் காணலாம். இந்த வறுமை நிலையை ஒரு கவிஞர் இணையத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார்.

எழில்மிகு வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ? ஏக்கத்தில் தவிக்கின்றேன்... ஏன் இந்நிலை வந்ததோ?... எண்ணங்கள் ஓடும் எனக்குள், ஆயிரம் கேள்விகள்... ஏனோ விடையில்லை...... எந்தப் பாவமும், எந்தத் தவறும் நான் செய்யவில்லை... ஏறாத கோவில்கள் ஏறித்தான் இறங்குகிறேன் நாளும்... என்னோடு ஒட்டிய என்னுயிர் பசியில் அழுதிட, ஏசுகிறேன் இறைவனை, அவன் கேட்கவுமில்லையே......எத்தனை பூக்கள் என்னைப்போன்று இவ்வுலகில் வாழுமோ?... ஏனமேந்தி நித்தமும் ஏளனப் பார்வைகளால் சாகுமோ?... எரிதழல் உள்ளத்தில் எரிந்திட எந்திரமாய் அலைகிறேன்... ஏற்றம் பெறாதோ ஏழையின் இந்த வாழ்வு......

அன்பர்களே, அக்டோபர் 16, உலக உணவு தினம். அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு தினம். இந்த இரண்டு தினங்களையும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் அடுத்தடுத்து குறித்து, இத்தினங்களுக்கென கருப்பொருள்களையும் அறிவித்து, உலகினர் எல்லாரும், இந்நாள்களைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும், நாடுகளும், இந்நாள்களைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றன. “பங்கேற்பிலிருந்து கீழ்மைப்படுத்தப்படுதல் மற்றும் ஒதுக்கப்படுதலிலிருந்து நகர்ந்து : வறுமையின் எல்லா வகையான வடிவங்களையும் அகற்றுதல்” என்ற தலைப்பில், 2016ம் ஆண்டின் வறுமை ஒழிப்பு நாள், இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த இரண்டு உலக நாள்களை முன்னிட்டு, உணவு, வறுமை பற்றிய பல புள்ளி விபரங்களை, ஐ.நா.வும், ஊடகங்களும் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகின்றன. கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், உலகில் ஏறக்குறைய 160 கோடிப் பேர் வறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 960 கோடியாக உயரும், அதற்குள் உணவு உற்பத்தியும் ஏறக்குறைய அறுபது விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும். அதேநேரம், உலக அளவில், உற்பத்தியாகும் மொத்த உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது, ஆண்டுக்கு 130 கோடி டன்கள் வீதம் சேதமடைகின்றன மற்றும் வீணாக்கப்படுகின்றன. அழுகிப்போன உணவுப்பொருள்களிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு, கார்பன் டை ஆக்சைடு வாயுவைவிட 25 மடங்கு வீரியம் கொண்டது. 2030ம் ஆண்டுக்குள், உலகில் வறுமையே இல்லாமல் ஆக்குவதற்கு, காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக இருக்கின்றது என்று, FAO எனும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் உலகில் வறுமையை ஒழிப்பது என, 193 நாடுகள், கடந்த ஆண்டில் நடந்த ஐ.நா. மாநாட்டில் அறிவித்தன. ஆனால் உலகில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்றே, இந்திய அரசுத்தலைவர் உட்பட பல தலைவர்கள் சொல்கின்றனர்.   

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உலக உணவு நாளை முன்னிட்டு, வெளியிட்ட செய்தியிலும், பசிக்கொடுமையை அகற்றுவதற்கு உலகில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் குறிப்பிட்டு அவற்றை ஊக்கப்படுத்தியுள்ளார். மேலும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறுமை நாளைக் குறிப்பிட்டுப் பேசினார். வறுமை, ஏராளமான நம் சகோதர, சகோதரிகளை, மாண்பிழக்கச் செய்கின்றது, அவர்களைப் புண்படுத்துகின்றது மற்றும் உயிரைப் பறிக்கின்றது. எனவே, இம்மக்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகவும், வேலைவாய்ப்புகளை வழங்கவும் தீர்வுகள் காணும், நன்னெறி மற்றும் பொருளாதார சக்திகளோடு எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை, உலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். 

அன்பர்களே, வறுமையை எப்படி விவரிப்பது? அது எப்படி உருவாகிறது? வறுமையை, ஏழ்மை, இல்லாமை, எளிமை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஈரான் நாட்டின் முன்னாள் அமைச்சரும், ஐ.நா.வில் பணியாற்றியவருமான Majid Rahnema என்பவர், வறுமையை ஒழிப்பது குறித்து பணியாற்றி வருபவர். இவர், ‘வறுமை எளிமையைப் பின்தொடரும்போது’என்ற தனது நூலில், சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை, ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை,  நவீன ஏழ்மை என, மூன்று விதமான ஏழ்மைகள் பற்றி பேசுகிறார். சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை என்பது, அடிப்படையில் எளிமையான வாழ்க்கைமுறை. இந்த வாழ்க்கை நிலைதான் பல பண்பாட்டாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. அடுத்து, ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை என்பது, உலகைப் பற்றிய  ஆன்மிகமுறையிலான பார்வையைச் சார்ந்தது. மூன்றாவதாக, நவீன ஏழ்மை என்பது, சமூக, பண்பாட்டு உறவுகளை எல்லாம் தன்னுடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருளாதார மேலாதிக்கத்தின் நேரடி விளைவு. உண்மையில் தனிமனிதர் ஒருவரின் உள் உலகம்தான் அவர் உணரும் ஏழ்மையையோ, செல்வத்தையோ நிர்ணயிக்கிறது. அவசியம் எது, மிகையானது எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவனுடைய உள்உலகம்தான் என்கிறார் Rahnema. ஆம். ஒவ்வொருவரும் தனது அக உலகத்தை சிந்திக்க வேண்டிய ஒன்று.

அன்பு இதயங்களே, உணவு வீணாவதைத் தடுக்கவும், பசியே இல்லாத நிலையை உருவாக்கவும், வறுமை நிலையை அகற்றவும் நம் பங்கு என்ன? நம் முயற்சிகள் என்ன? நாம் பெருள்களை வாங்கும்போதும், அவற்றைப் பயன்படுத்தும் போதும், உணவைச் சமைத்து உண்ணும்போதும் நம்மைச் சுற்றியிருப்பவர்களை நினைத்துப் பார்ப்போம். வாழ்க்கையில் எது மகிழ்வைக் கொடுக்காதோ, எது அழகைக் கொடுக்காதோ, எது நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுவதுதானே, நலமான வாழ்வு வாழ உதவும்.    

ஆறாம் வகுப்பு ஆசிரியர், மரங்களைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ‘சார் மனுசங்களாம் எண்பது, தொண்ணூறு வயசானதும் இறந்து போய்டுறாங்க. ஆனா இந்த மரங்கள் மட்டும் எவ்வளவு வயசானாலும் சாகறதே இல்ல. அது மாதிரி மனுசங்களும் சாகாமலே வாழ முடியாதா..?’ என்று கேட்டான். அதற்கு ஆசிரியர், மனிதனா பிறந்தா இறந்துதான் போகனும் என்பது நியதி. ஆனா வாழுற காலத்துல நல்ல முறையா வாழ்ந்தோம்னா, இறந்த பின்னாடியும் வாழலாம்’ என்றார். அப்போது வகுப்பில், ஒரு மாணவர், ‘இறந்த பின்னாடி பேயாதான் வாழலாம்’ என்று சொல்ல எல்லாரும் சிரித்தனர். உடனே ஆசிரியர்,  '' அன்னை தெரசா இறந்து ரொம்ப வருசமாச்சு. ஆனாலும் இன்னைக்கு வர நாம யாருமே மறக்கல. அவங்கள பத்தி பாடத்துல படிக்கிறோம். அவங்களோட உருவத்த சிலையாவும் போட்டோவும் வச்சிருக்கோம். அது மட்டுமில்லாம புனிதர் பட்டம் வேற கொடுத்திருக்கோம். இதுக்கு காரணம் என்ன..? அவங்க வாழ்ந்த காலத்துல ஏழை எளியோருக்கும் நோயாளிக்கும் சுயநலமில்லாம செய்த உதவிதான் காரணம். நீங்களும் இறந்த பின்னாடி வாழணும்னா  வாழுற காலத்துல நல்ல மனிதனா வாழுங்க'' என்றார். கவியரசு கண்ணதாசன் அவர்களும், மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்...னு எவ்வளவு காலத்திற்கு முன்பே அழகாகப் பாடியுள்ளார். அதனால் மாணவர்களே, வாழும்போதே பிறர்க்குப் பயன்படும் நல்ல வாழ்வு வாழுங்கள் என்றார் ஆசிரியர். அன்பு இதயங்களே, “எவன் ஒருவன் மனதுக்கு ஓர் உந்துதலை கொடுக்கும் சக்தி பெற்று, எப்பொழுதும் மனதை ஊக்குவிக்கும், உற்சாகமூட்டும், நம்பிக்கை மிகுந்த எண்ணங்களாலேயே தன்னை நிரப்பிக் கொள்கிறானோ, அவன், வாழ்க்கையின் ஒரு பெரும் புதிரை விடுவித்தவனாவான்” என்கிறார்கள். எனவே, நாம், நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், நம் பார்வையை விசாலமாக்குவோம். நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பார்ப்போம். நமக்கும் கீழே பசி, பட்டினியால் வாடும் உள்ளங்களை நினைத்துப் பார்ப்போம். வறுமை வாட்டுகிறதே என்று அதிலே மூழ்கிவிடாமல், அதிலிருந்து எழும் வழிகள் பற்றிச் சிந்தித்துச் செயல்படுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.