2016-10-17 17:06:00

கிறிஸ்தவ, தாவோயிச உரையாடல் கருத்தரங்கு


அக்.17,2016. இன்றைய உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கிறிஸ்தவர்களும், தாவோயிச நம்பிக்கை கொண்டவர்களும் ஒன்றிணைந்து உழைக்கமுடியும் என்று, இவ்விரு மதங்களைச் சார்ந்தவர்களும் மேற்கொண்ட இருநாள் கருத்தரங்கின் இறுதியில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள், தாய்வான் நாட்டின் தாய்பெய் (Taipei) நகரில் "உண்மையை ஒன்றிணைந்து தேடுதல் - கிறிஸ்தவ, தாவோயிச உரையாடல்" என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கின் இறுதியில், இவ்விரு மதங்களைச் சார்ந்தவர்களும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இவ்வறிக்கையில், உலகமயமாதல், குடிபெயர்வு, மதம் மற்றும் கலாச்சார பதட்ட நிலைகள், மத அடிப்படைவாதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வதில் இரு மதங்களும் ஒன்றிணைந்து செயலாற்றமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களின் கலாச்சாரங்களை மதிக்க குழந்தைகளுக்குக் கற்பித்தல், நீதி, அமைதி, ஒன்றிப்பு, உடன்பிறந்த உணர்வு, விடுதலை, மத நல்லிணக்கம் போன்ற மதிப்பீடுகளை வளர்த்தல் ஆகிய கருத்துக்கள் இந்த இருநாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.

தாய்பெய் தாவோயிச Baoan ஆலயம், தாய்வான் தலத்திருஅவை, ஆசிய ஆயர் பேரவை, WWC எனும் உலக கிறிஸ்தவ அவை மற்றும் திருப்பீடத்தின் பலசமய உரையாடல் அவை ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக, இக்கருத்தரங்கு நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.