2016-10-17 14:26:00

இது இரக்கத்தின் காலம் : தேவை ஆசை, பேராசை அல்ல


ஒரு கிராமத்தில் வறுமையில் வாடிய நான்கு நண்பர்கள், பிழைப்பதற்காக வேறிடம் சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு குடிசையில் ஒரு யோகியைப் பார்த்தனர். அவரிடம் சென்று, ஐயா, நாங்கள் வறுமையில் வாடுகிறோம், எங்களுக்குப் பொன்னும், பொருளும் கிடைக்க வழி சொல்லுங்கள் என்று மன்றாடினர். அவர்களின் நிலைமையைக் கேட்ட யோகிக்கு, அவர்கள் மீது இரக்கம் சுரந்தது. அவர்கள் நால்வர் தலையிலும், பருத்தியிலான திரைச்சீலைகளை வைத்து, இமயமலை நோக்கி நடங்கள். உங்கள் தலையிலிருந்து திரைச்சீலை விழும் இடத்தில், உங்களுக்குத் தேவையான பொருள் கிடைக்கும் என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அவர்களும் நன்றியோடு விடைபெற்று, மகிழ்ச்சியோடு நடந்தார்கள். சில நாள்கள் நடந்த பின்னர், ஒருவரின் திரைச்சீலை கீழே விழுந்தது. அந்த இடத்தில் அவர் தோண்டினார். ஏராளமான செம்புக் கனிமம் கிடைத்தது. மற்ற மூவரிடம், இந்தக் கனிமம் ஏராளமாக உள்ளது, நாம் நால்வரும் எடுத்துக்கொண்டு வீடு திரும்புவோம் என்றார் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதனால் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். பின் சில மைல்கள் நடந்ததும், இரண்டாவது ஆளின் திரைச்சீலை விழுந்தது. அந்த இடத்தில் அவர் தோண்டியபோது வெள்ளிக் காசுகள் கிடைத்தன. அவரும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். அதன்பின்னர், சிறிது தூரத்தில் மூன்றாவது ஆளுக்கும் திரைச்சீலை விழுந்தது. அவ்விடத்தில், தங்கக் காசுகள்  கிடைத்தன. அவரும் அவற்றை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். நான்காவது ஆள், இந்த மூவரின் புதையல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாமல், நவரத்தினம் கிடைக்கும் என்ற பேராசையில் தொடர்ந்து நடந்தார். அப்போது எதிரில் தென்பட்ட ஓர் ஆளின் தலையில் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. உடலெல்லாம் இரத்தமும் வடிந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்து, நீ யார்? என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்தச் சக்கரம், இவர் தலைக்குமேல் வந்து சுழலத் தொடங்கியது. ஏய், என்ன அநியாயம் இது, எப்போது இது என்னைவிட்டு அகலும் என்று கேட்டார் நான்காமவர். அடுத்த பேராசைக்காரனை நீ சந்திக்கும்போது என்று சொல்லிவிட்டு, அந்த ஆள் நிம்மதியோடு சென்றுவிட்டார். இயேசு சொல்கிறார்: “எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடாதாவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது(லூக்.12:15)” என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.