2016-10-15 17:11:00

வயதானவர்களின் தனிப்பட்ட மாண்பு மதிக்கப்பட அழைப்பு


அக்.15,2016. இத்தாலிய வயதானவர்கள் மற்றும், அவர்களைப் பராமரிப்பவர்கள் என, ஏறக்குறைய ஏழாயிரம் பேரை, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதானவர்களை, திருஅவை, மிகுந்த பாசத்தோடும், நன்றியோடும் நோக்குகின்றது என்று கூறினார். 

வயதானவர்கள், கிறிஸ்தவ சமூகம் மற்றும் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கங்கள், குறிப்பாக, அவர்கள், மக்களின் வழிமரபுகளாகவும், நினைவுகளாகவும் உள்ளனர் எனக் கூறினார் திருத்தந்தை.

வயதானவர்களைப் பாதுகாக்குமாறு அரசியல் தலைவர்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, சமூகத்தில், அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி, அவர்களின் தனிப்பட்ட மாண்பு மதிக்கப்படுவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

வயதானவர்கள், உற்பத்தி செய்ய தகுதியற்றவர்கள் என்று கருதி, அவர்களை ஓரம் கட்டும், கொடுமையான தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தலைமுறைகளுக்கு இடையே பிணைப்பை ஊக்குவிப்பது முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இத்தாலிய தேசிய தாத்தா பாட்டிகள் நாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. எனினும், இதையொட்டிய நிகழ்வுகள் அக்டோபர் மாதம் முழுவதும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இத்தாலிய வயதானவர்கள் மற்றும், அவர்களைப் பராமரிப்பவர்கள், திருத்தந்தையை இச்சனிக்கிழமையன்று சந்தித்தனர்.

இத்தாலியில், 1949ம் ஆண்டில், வயதானவர்களுக்கென உருவாக்கப்பட்ட ANLA கழகத்தால், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.