2016-10-15 17:28:00

எஸ்ஓஎஸ் கிராமத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை


அக்.15,2016. உரோம் நகரில், ஆதரவற்ற சிறார் பராமரிக்கப்படும்,“எஸ்ஓஎஸ் கிராமம்(SOS Village)” என்றழைக்கப்படும் இல்லத்திற்கு, இவ்வெள்ளி மாலையில் சென்று, அங்குள்ளவர்களோடு கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களாக, முன்னறிவிப்பு ஏதுமின்றி, சமூகத்தில் வலுவற்றவர்கள் பராமரிக்கப்படும் இல்லங்களைப் பார்வையிட்டு வரும் திருத்தந்தை, இதன் ஒரு பகுதியாக, இவ்வெள்ளி மாலையில் எஸ்ஓஎஸ் கிராமம் சென்றார்.

பெற்றோரால் கண்காணிக்க இயலாத 12 வயதுக்குட்பட்ட, சிறார் வாழும் இந்த இடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஆறு சிறாரும் ஒரு தாயும் உள்ளனர். இங்கு, சிறிய கால்பந்து விளையாட்டு மைதானம் மற்றும், சிறிய விளையாட்டு மைதானமும் உள்ளன.

இத்தகைய “SOS Village” இல்ல அமைப்பு, 1949ம் ஆண்டில், ஆஸ்ட்ரியாவில், போரில் பெற்றோரை இழந்த சிறாருக்கு, கல்வி வழங்கும் நோக்கத்தில், ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், “SOS Village” இல்லம் சென்று திரும்பும் வழியில், உரோம் நகரிலுள்ள, வில்லா பெத்தானியா மருத்துவமனை சென்று, அங்குச் சிகிச்சை பெற்றுவரும் கர்தினால் Andrea Cordero Lanza di Montezemolo அவர்களையும் சந்தித்து, சிறிது நேரம் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

91 வயது நிரம்பிய கர்தினால் Andrea Cordero Lanza di Montezemolo அவர்கள், புனித பவுல் பசிலிக்காவின் முன்னாள் தலைமைக்குரு ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.