2016-10-15 16:05:00

இது இரக்கத்தின் காலம் – முயற்சிக்-கலாம் உருவாக்-கலாம்


கனவுகளின் கருவூலம், கனவுகளின் சிற்பி, என்று புகழப்படும் ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் (A.P.J.) அப்துல் கலாம் என்ற மாமேதை, 1931ம் ஆண்டு, அக்டோபர் 15ம் தேதி, இந்தியாவின் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இளையோர் உள்ளங்களில் உன்னத கனவுகளை விதைத்துச் சென்ற அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய பிறந்தநாள் அஞ்சலி, அவரது கனவுகளை போற்றி வளர்ப்பது.

சலேசிய சபை அருள்பணி செல்வகுமார் அவர்களின் பொறுப்பில், திருச்சியில் இயங்கிவரும் ‘தொன் போஸ்கொ மீடியா’ மையம், "பெரும் கனவு" என்ற தலைப்பில் ஓர் அழகிய பாடலை YouTubeல் பதிவு செய்துள்ளனர். "கனவுகள் காண்போம் தோழா" என்று துவங்கும் இப்பாடலை நாம் மாமேதை அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாகப் படைக்கிறோம்.

கனவுகள் காண்போம் தோழா, பல கனவுகள் காண்போமே - நமை

உறங்கவிடாமல் செய்யும் பெரும் கனவுகள் காண்போமே

எண்ணங்களே செயலாகுமே செயல்களின் விளைவு பழக்கங்களே

பழக்கங்களே பண்பாகுமே பண்பே நமை உயர்த்துமே

கேள்விகள்தான் புது சிந்தனை ஓட்டத்தின் ஊற்றாகும்

தேடல்கள்தான் புது பாதைகளை இங்கு உருவாக்கும்

படிப்பதனால் இங்கே பயனில்லை; படைக்கவும் வேண்டுமே

எண்ணம்போலேதான் எல்லோர்க்கும் வாழ்க்கை அமையுமே

சிந்திக்கலாம் சீர்தூக்கலாம் முயற்சிக்கலாம் உருவாக்கலாம்

சோதிக்கலாம் சாதிக்கலாம் நிரூபிக்கலாம் வெல்லலாம்

முடியாது என்ற சொல் அகராதியில் கிடையாது

முயற்சி திருவினையாக்கும் உன்னை கை விட்டுடாது

முயற்சிகள் தோற்றிடலாம் ஆனாலும் முயன்றிடத் தயங்காதே

முயற்சியும் உழைப்பும் ஒன்று சேர்ந்தாலே வெற்றிமேல வெற்றியேதான்

சிந்திக்கலாம் சீர்தூக்கலாம் முயற்சிக்கலாம் உருவாக்கலாம்

சோதிக்கலாம் சாதிக்கலாம் நிரூபிக்கலாம் வெல்லலாம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.