2016-10-14 16:19:00

வெளிவேடம், ஒருவகை ஆன்மீக மூளைக்கோளாறு நோய்


அக்.14,2016. கிறிஸ்தவர்கள், வெளிவேடத்தில் சிக்கிக்கொள்ளாமல் எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலி மறையுரையில் கூறினார்

இன்றைய நாளின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து, வெளிவேடத்தின் ஆபத்துகள் பற்றி மறையுரையில் எச்சரித்த திருத்தந்தை, செயலில் காட்டாமல், வெறுமனே பேசியே தீர்க்கும் வெளிவேடத்தை, ஒருவகை ஆன்மீக மூளைக்கோளாறு நோய் என்று கூறினார்.

நல்ல மாவும், புளிப்பு மாவும் இருக்கின்றன, நல்ல மாவு இறையாட்சியைக் கட்டியெழுப்பும், புளிப்பு மாவு, இறையாட்சியின் தோற்றத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை, தனது பாட்டி, கர்னிவால் விழா சமயத்தில், புளிப்பு மாவினால் தயாரிக்கும் பிஸ்கட்டுகளை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

முதலில் மிகவும் மெல்லியதாக இருக்கின்ற மாவு பிஸ்கட்டுகளை, எண்ணெய்யில் போட்டு பொறித்தவுடன் பெரியதாக உப்பிவரும், ஆனால், அவைகளைச் சாப்பிடும்போது, அவற்றின் உள்ளே காலியாக இருக்கும், இவற்றைப் பொய்த் தோற்றம் என்று பாட்டி சொல்வார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரியதாகத் தோன்றும் அப்பொருளில் உள்ளே ஒன்றும் இருக்காது, இதுதான் உண்மை, இதை வெளிவேடம் என்றும் விவரித்த திருத்தந்தை, இந்த வெளிவேடம், ஒருவகை, ஆன்மீக மூளைக்கோளாறு நோய் என்றும் கூறினார்.

நாம் ஆண்டவரிடம் செபிக்கும்போது, நம் உதடுகள் ஒன்றை முணுமுணுக்கும், ஆனால் நம் இதயம் அவரைவிட்டுத் தொலைவில் இருக்கும், அந்த நிலையே வெளிவேடம் என்று விவரித்த திருத்தந்தை, வெளிவேடம், உட்பிரிவினைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆற்றுகின்ற செயல்களை, எத்தகைய உணர்வோடு செய்கின்றோம் என்பதை ஆன்ம பரிசோதனை செய்யுமாறு மறையுரையில் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ளாமலும், பொய்பேசாமலும், உண்மையையே பேசுவது முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.